Friday, January 1, 2021

போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை பத்ம விபூசன் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 1, 1894).

போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை பத்ம விபூசன் சத்தியேந்திர நாத் போஸ் பிறந்த தினம் இன்று (ஜனவரி 1, 1894). 

சத்தியேந்திர நாத் போஸ் (Satyendra Nath Bose) ஜனவரி 1, 1894ல் கொல்கத்தாவில் பிறந்தார். பள்ளிகாலத்தில் இறுதி தேர்வில் 100 க்கு 110 மதிப்பெண்களை கணக்கில் பெற்றிருந்தார். காரணம் ஒரே கணக்கை வெவ்வேறு முறைகளில் போட்டிருந்தது தான். பின் கல்லூரியில் இயற்பியலில் தங்க பதக்கம் பெற்று தேறினார். இவர் கல்கத்தா மாநில கல்லூரியில் பயின்ற காலம் வங்கத்தின் பொற்காலம். ஐன்ஸ்டீன் தெரியுமென்றால் போஸையும் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். குவாண்டம் இயற்பியல் துறைக்கு இவர் ஆற்றிய தொண்டு அத்தகையது. குவாண்டம் மெக்கானிக்ஸ் என்கிற துறையின் உட்பிரிவான குவாண்டம் ஸ்டாடிஸ்டிக்ஸ் இவரால் தான் உருவானது. வெறும் அறிவியலில் மட்டும் நாட்டம் கொண்டிருக்கவில்லை அவர். ஐந்து மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் இசை வல்லுனரும் கூட. 


குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த பிளாங்கின் 'தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்' என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்கு ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார். உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்தது தான் போஸ்-ஐன்ஸ்டீன் புள்ளியியல். இதைச் செய்தபோது போசுக்கு வயது முப்பது. போஸ்Max Planck's Law” மற்றும் "Light Quantum Hypothesis" பற்றிய ஒரு கட்டுரையை வெறும் ஆறு பக்கங்களில் எழுதி ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். ஐன்ஸ்டீன் அசந்து போனார். இருவர் பெயரையும் இணைத்து அதை வெளியிட்டார். அந்த கட்டுரையே போஸ் ஐன்ஸ்டீன் புள்ளியியல் எனும் துறைக்கு வழிவகுத்தது. அப்பொழுது அவர் முனைவர் பட்டம் பெற்றிருக்க வில்லை.


ஐன்ஸ்டீன் கடிதம் கொடுத்து, அதில் போஸை விட தலைசிறந்த விஞ்ஞானியை நீங்கள் காண முடியுமா?" என அடிக்குறிப்பிட்டு அனுப்பினார். உடனே டாக்கா பல்கலைகழக பேராசிரியர் ஆகினார் போஸ் என்றால் அவரின் மேதமையை உணர்ந்து கொள்ளலாம். 1916ல் சத்யேந்திரநாத் அறிவியல் பல்கலைக்கல்லூரியில் ஆசிரியராக சேர்ந்தபோது அவருடன் ஆசிரியப்பணியில் சேர்ந்தவர் மேக்நாத் சாகா. அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களும் விரிவுரையாளர்களும் பழைய இயற்பியலையே கற்பித்துக் கொண்டிருந்த நிலையில் இவ்விருவரும் நடப்பு இயற்பியலில் ஏற்பட்டுக் கொண்டிருந்த புரட்சிகரமான புதிய தத்துவங்களைப் பற்றி அறிவதிலும் அவற்றைக் கற்பிப்பதிலும் ஆர்வம் செலுத்தினர். ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவம் அடங்கிய ஆய்வுக்கட்டுரையை பெரும் சிரமத்திற்குப் பின்னர் பெற்றனர். பின்னர் தான் தெரிந்தது, கட்டுரை செர்மன் மொழியில் இருந்தது என்று. போஸ் மனம் தளராதவர் அல்லவா! தானும் கற்று, சாகாவிற்கும் செர்மன் மொழியைக் கற்றுத்தந்து, பின்னர் அந்த ஆய்வுக்கட்டுரையை இருவரும் படித்தனர். அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தனர்.

 Bose Einstein Condensate (BEC): Definition, Explanation and Examples


ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்புக் கோட்பாடு ஆய்வுக்கட்டுரையை முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்கள் என்ற பெருமையை அடைந்தனர். இன்னும் எண்ணற்ற பிரிவுகளில் அவர் தொடர்ந்து ஆய்வுகள் செய்து கொண்டே இருந்தார். இவரின் கட்டுரைகள் தான் ஐன்ஸ்டீன் பிளான்க் முதலியோரின் குவாண்டம் தியரி மற்றும் டிராக் ஹெய்சென்பெர்க் முதலியோரின் குவாண்டம் மெக்கனிக்ஸ் இரண்டுக்கும் பாலமாக இருந்தது என்றால் அது மிகையில்லை. போர் எனும் நோபல் பரிசு பெற்ற அறிஞர் ஒரு உரை நிகழ்த்தும் பொழுது தடுமாறினார். கண்மூடிய படியே போஸ் அமர்ந்திருந்தார் ஒரு இடத்தில போருக்கு தடுமாற்றம் வரவே "இதை நீங்கள் கொஞ்சம் விளக்க முடியுமா?" என போசை பார்த்து கேட்க கண்களை திறந்து விளக்கி விட்டு மீண்டும் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து விட்டார். 


தாய்மொழி வழிக்கல்வி தான் அவசியம் என்றார். வங்காள மொழியில் அறிவியலை பயிற்றுவித்தார் போஸ். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போசான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. அறிவியலில் இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூசன் இந்திய அரசால் 1954ல் வழங்கப்பட்டது. போஸ்- ஐன்ஸ்டீன் குவாண்டம் இயற்பியல் உருவாகக் காரணமாயிருந்த அறிவியல் மாமேதை சத்தியேந்திர நாத் போஸ் பிப்ரவரி 4, 1974ல் தனது 80வது அகவையில் கொல்கத்தாவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.




No comments:

Post a Comment

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்?

ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதிசய விண்வெளி நிகழ்வு - எப்போது, எப்படி பார்க்கலாம்? ஜனவரி 21 ஆம் தேதி, வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, ...