பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தத, நோயெதிர்ப்பு முறையின் தந்தை, மருத்துவர் எட்வர்ட் ஜென்னர் நினைவு தினம் இன்று (ஜனவரி 26, 1823).
எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner) மே 17, 1749ல் இங்கிலாந்திலுள்ள பெர்க்கிலி நகரில் ஒன்பது குழந்தைகளுள் எட்டாவது குழந்தையாக பிறந்தார். இவருடைய தந்தை ரெவரண்ட் ஸ்டீபன் ஜென்னர் அக்கிராமத்தின் புரோகிதராக இருந்தார். இது ஜென்னருக்கு மிகச் சிறந்த அடிப்படை கல்வி கிடைக்க வழிசெய்தது. ஜென்னர் வோட்டனிலும் சிரென்செஸ்டரிலும் பள்ளிக் கல்வியைப் பெற்றார். இச்சமயத்தில் தான் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆர்வமேற்பட்டது. தனது பதினான்கு வயதில் சிப்பிங்க் சோட்பரி என்ற இடத்தில் டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற அறுவை சிகிச்சை மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்குச் சேர்ந்தார். ஏழாண்டுகள் பெற்ற இப்பயிற்சியின் காரணமாக ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராகத் தேர்ந்தார். அந்த சமயத்தில் பண்ணை மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கை ஜென்னருக்கு அம்மை நோய்க்கு மருந்து கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. 'கௌபாக்சு' எனப்படும் பசுக்களின் மடிக்காம்புகளை புண்ணாக்கும் ஒரு நோய் ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால் அதே மனிதனுக்கு பெரியம்மை நோய் வராது என்பதுதான் அந்த நம்பிக்கை.
எனவே பெரியம்மை
நோய் வராமல் தடுக்க 'கௌபாக்சு' நோயை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நம்பினர். அந்த
நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ளினர்.
ஜென்னர் மட்டும் அதில் உண்மை இருக்குமா என்று ஆராயத் தொடங்கினார். சுமார் இருபது
ஆண்டுகள் விடாமல் பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்தார். இதனிடையில் 1770ல் புனித ஜார்ஜ்
மருத்துவமனையில் ஒரு புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணராகவும் உடற்கூறு
அறுவையாளராகவும் பணியாற்றினார். ஜென்னருக்கு இயற்கை மீதிருந்த ஆர்வம் மற்றும்
சிறப்பான பணியின் காரணமாக இங்கிலாந்தின் இராயல் கழக உறுப்பினருக்காகப்
பரிந்துரைக்கப்பட்டார். பயற்சிக்குப் பின் 1773ல் தனது சொந்த ஊரான பெர்க்கிலி
திரும்பினார். அங்கும் ஒரு சிறந்த மருத்துவராகவும் விளங்கினார். இயற்கை
ஆர்வலரான ஜென்னர் குயில்களின் வாழ்வு முறை பற்றி குறிப்பாக அடைகாக்கும் கூட்டினுள்
குஞ்சுகளுக்கு 12 நாட்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து
அதற்கான காரணத்தை ஆய்வு செய்து வெளியிட்டார். மற்ற பறவைகளின்
கூட்டில் வைக்கப்படும் குயில் குஞ்சின் முதுகில் ஒரு வித அழுத்தம் ஏற்படுகிறது.
இந்த அழுத்தம் காரணமாகவே அது மற்ற பறவைக் குஞ்சுகளிலிருந்து வேறுபடுகிறது. ஆனால்
இவரது ஆய்வு 20 ஆம் நூற்றாண்டில் குயிலின் வாழ்க்கை முறை பற்றிய புகைப்படங்கள்
வெளிவந்த பின்னரே உண்மையென ஒத்துக் கொள்ளப்பட்டது. 1788ல் ராயல் கழகத்தினால்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எட்வர்சு
ஜென்னர் 1788 மார்ச் மாதம் கேதரின் கிங்ஸ்கோட் என்பவரை மணந்து கொண்டு மூன்று
பிள்ளைகளுக்கு தந்தையானார். இவர் குளுசெஸ்டெர்சையர் என்ற இடத்திலுள்ள கிங்க்ஸ்கோட்
பூங்கா உரிமையாளரான ஆந்தோனி கிங்ஸ்கோட் என்பவரின் மகளாவார். 1792ம் ஆண்டு
செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவப் பட்டம் பெற்றார்.
குளுசெஸ்டெர்ஷைர் என்ற நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்தார். மார்பு
முடக்குவலி (angina pectoris) பற்றி முதலில்ஆராய்ந்து வெளியிட்ட பெருமையும் ஜென்னரைச் சேரும். ஹிபர்தீன்
என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வலியால் பாதிக்கப்பட்ட இதயத் தமனிகள்
அவற்றின் செயல்பாடுகளைச் செய்ய முடியாது போவதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி
முறை 1721
இலிருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால் இதில் நோயைக் கட்டுப்படுத்தி
முழுதுமாக போக்க முடியவில்லை. லேடி மேரி வோட்லே மாண்டேகு என்பவர் இஸ்தான்புல்லில்
பிரித்தானியத் தூதுவராக இருந்த தனது கணவருடன் சென்ற போது அங்கு பயன்படுத்தப்பட்ட
தடுப்பூசி முறையை பிரிட்டனுக்கு இறக்குமதி செய்து வந்தார். ஆனால் இம்முறையில் 60 % மக்கள்
பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட 60% மக்களில் 20% பேர் இறந்து போயினர். சிர்க்கான்சிய மக்களிடமிருந்த இம்முறையை
துருக்கி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
1765ல் ஜான் ஃபியூஸ்டெர் என்ற மருத்துவர்
பெரியம்மை நோய்க்கு கௌபாக்சு நோயினால் பெரியம்மை நோயைத் தடுக்க முடியும் என்ற தனது
கட்டுரையை லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார். ஆனால் அதற்கான விளக்கத்தை
அவரால் அளிக்க இயலவில்லை.
பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண
வேண்டும் என்ற வேட்கை காரணமாக செய்த இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம
மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை
சோதித்துப் பார்க்க எண்ணிய ஜென்னர் 1796ம் ஆண்டு மே 14-ஆம் நாள் தனது
தோட்டக் காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான
தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். சாரான நில்மெசு என்ற பண்ணைப் பெண்ணின்
கையிலிருந்த கௌபாக்சு கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின்
உடலுக்குள் செலுத்தினார்.
எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு கௌபாக்சு
நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குணமடைந்தான்.
சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர் சிறுவனின் உயிரோடு விளையாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் சற்றும் மனம் தளராமல் அந்த தடுப்பூசியை சிறுவனுக்குக் குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்படவில்லை. அம்மைக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வரலாற்றில் அழியா இடம் கிடைத்தது. டூட்டிங்கில் புனித ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி நூலகத்திலுள்ள சுவரில் ஜேம்பிப்சும் இடம்பெற்றுள்ளார். அதன்பின் மேலும் பல ஆய்வுகளைச் செய்து தனது முடிவுகளை 1798ம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.
எட்வர்டு என்னருக்கு முன்னர் 1770களிலேயே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஐந்து கண்டுபிடிப்பாளர்கள் (செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி, ரெண்டெல், பிளெட்) கௌபாக்சு நோயிலிருந்து தடுப்பூசியினை பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்திருந்தனர். இதில் பெஞ்சமின் ஜெஸ்டி என்பவர் பெரியம்மை நோய்க்கெதிரான தடுப்பூசியினை தானும் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து எட்வர்டு ஜென்னர் வெளியிட்ட முடிவுகளே விளக்கத்துடன் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருந்தது. பிரிட்டிஷ் ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மை குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை ஐரோப்பாவெங்கும் பரவியது. ஃபிரான்சிஸ்கோ சேவியர் டி பால்மிஸ் என்பவர் உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்து எட்வர்டு ஜென்னர் கண்டறிந்த தடுப்பூசி முறையின் மூலமாக பெரியம்மை நோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டார். மூன்று வருடங்கள் இடைவிடாது பயணித்து அமெரிக்கா, பிலிப்பைன்சு, மக்காவ், சீனா, செயின்ட் ஹெலனா தீவு ஆகிய நாடுகளில் ஆயிரம் தடுப்பூசிகளை செலுத்தினார். இதனால் ஜென்னரின் புகழ் உலகெங்கும் விரைவாக பரவியது.
எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு. ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர். இவர் நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்றார். இவருடைய கண்டுபிடிப்பு பிற கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் மனித உயிர்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவியது. மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802ம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808ம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார். அம்மை நோயைத் துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன.
மருத்துவ உலகில்
எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது. அவர்
இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்குப் பலியாகியிருப்பர்.
அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980ம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக
உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
1810ம் ஆண்டு அவரது மூத்த மகன் இறந்து போனார்.
அதனால் துவண்டுபோன ஜென்னர் மருத்துவத் தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும்
ஓய்வு எடுத்துக்கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், இயற்கையை
ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது மனைவியும் இயற்கை
எய்தினார். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜென்னர் ஒடிந்து போனார். ஜனவரி
23, 1823ல்
பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து குணமடையும் முன்பே இரண்டாவது
முறையும் பக்கவாத நோய் தாக்கியது. பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து
கண்டுபிடித்ததற்காக எட்வர்ட் ஜென்னர் ஜனவரி 26, 1823ல் தனது 73வது அகவையில் இங்கிலாந்திலுள்ள
பெர்க்கிலி நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி
பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி,
புத்தனாம்பட்டி,திருச்சி.
இது போன்ற தகவல் பெற
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment