Friday, February 12, 2021

அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 12, 1809).

அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 12, 1809). 

ஆபிரகாம் லிங்கன் (Abraham Lincoln) பிப்ரவரி 12, 1809ல் அமெரிக்காவின் கெண்டக்கியில் ஓர் ஏழை குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை தாமஸ் லிங்கன் ஒரு தச்சர். சிறுவனாக இருந்த போது, தந்தையின் பணிகளில் லிங்கன் உதவி புரிந்தார். தாயார் நான்சி ஹாங்க்ஸ். லிங்கன் காடுகளுக்கிடையே ஒன்பது மைல் நடந்து சென்று கல்வி பயின்றார். லிங்கனுக்கு 9 வயது இருக்கும்போது தாய் இறந்து போனதால், சிற்றன்னையால் லிங்கன் வளர்க்கப்பட்டார். குடும்ப ஏழ்மை காரணமாக லிங்கனால் சரியாக படிக்க முடியவில்லை. பிறருக்கு உதவி செய்தல், அடுத்தவர் மீது அன்பு செலுத்துதல் போன்ற அரிய குணங்கள் சிறு வயதிலேயே லிங்கனிடம் இருந்தது. எப்போதும் கலகலப்பாகப் பழகுதல், கதை சொல்லுதல், வேடிக்கையாகப் பேசுதல் ஆகிய லிங்கனின் குணங்கள் அவர் மீது மற்றவர்களை விருப்பம் கொள்ளச் செய்தன. சிறிய வயதில் இந்தச் சிறுவன் புத்தகங்களை சத்தமாக வாசிப்பதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிசயப்படுவார்கள். 

பள்ளியில் படித்தது சுமார் ஒரு வருடம் மட்டுமே. ஆனால் யாரிடமாவது ஏதாவது புத்தகம் இருந்தால், எப்படியாவது கெஞ்சிக் கேட்டு வாங்கி வந்து படித்து முடித்துவிடுவான், சிறுவன். ஊர் ஊராகச் சென்று பாடம் சொல்லித் தரும் ஆசிரியர் ஒருவரிடம் மூன்று வாரங்கள் ஆரம்பக் கல்வி பயின்றார். அந்த ஆசிரியர் தேர்வு நாளன்று ஒரு புத்தகத்தைக் கொடுத்து சில பக்கங்களை வாசிக்கச் சொன்னார். இந்தச் சிறுவனைவிட வயதில் மூத்த பையன்கள் வாசிக்க முடியாமல் திணறினார்கள். ஆபிரகாமோ மேடையில் சொற்பொழிவாற்றுவது போல கட கடவென வாசித்துக் காட்டினான். கரித்துண்டால் சுவரிலும் தரையிலும் எழுதிப் பழகினான். கட்டுரைகள் எழுதினான். 14 வயதில் ஒரு விவசாயியிடமிருந்த ‘தி லைஃப் ஆஃப் வாஷிங்டன்’ என்ற ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை வாங்குவதற்காக 12 மைல் தூரம் நடந்து சென்றான். இந்த நூலை திரும்பத் திரும்ப படித்தான்.

 Image result for Abraham Lincoln gif

ஒருமுறை, நியூ ஆர்லியன்ஸ் என்ற நகரத்திலுள்ள சந்தைக்கு லிங்கன் சென்றிருந்தார். அங்கே ஒரு நீக்ரோ பெண் அடிமையாக விற்கப்படுவதைக் கண்டார். அடிமைகள் என்ற பெயரில் கறுப்பினத்தவர்கள் விற்கப்படுவதையும் இரும்புக் கம்பிகளால் கட்டப்பட்டிருப்பதையும் சாட்டையால் அடிக்கப்படுவதையும் ஒட்டுமொத்தமாகக் கொடுமைப்படுத்தப்படுவதையும் கண்டார். அவர் மனம் துடித்தது. இந்தக் கொடுமைக்கு முடிவு காண வேண்டும் என்று லிங்கன் விரும்பினார். அதற்கான வழிமுறைகளைக் கண்டறிய முற்பட்டார். தனது இருபத்து மூன்றாவது வயதில் முதன் முதல் ஆபிராகாம் லிங்கன் பிளாக் காக் போரில் (black hawk war) கலந்து தலைவனாக பணியாற்றியது அவருக்கு புதியதோர் பாதையை காட்டியது. 1833ல் ஆண்ட் ரூத்லெஸ் என்ற பெண்ணைக் காதலித்து மணந்து கொண்டார். ஆனால் இரண்டே ஆண்டுகளில் ஆண்ட் நோய்வாய்ப்பட்டு இறந்தார். 7 ஆண்டுகள் கழித்து தனது 33 வயதில் மேரி டாட் எனும் பெண்ணை மணந்தார். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. 

 

லிங்கன் தனது 22 ஆவது வயதில் ஓர் அலுவலகத்தில் குமாஸ்தாவாக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் கடனுக்கு ஒரு கடையை வாங்கி வியாபாரத்தில் தோற்றுப்போனார். அடுத்து ஓர் அஞ்சலகத்தில் அஞ்சல்காரராகப் பணியாற்றினார். அதன்பிறகு அவர் தாமாகவே படித்து வழக்கறிஞர் ஆனார். 1847-1849 ஆண்டுகளில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்தார். அரசியலில் ஈடுபடுவதன் மூலமே அடிமைத்தனத்தை ஒழிக்க முடியும் என்ற முடிவுக்கு லிங்கன் வந்திருந்தார். 1834 ஆம் ஆண்டு தமது 25 ஆவது வயதில் முதன் முதலாக இலினோய் மாநில சட்டமன்றப் பதவிக்கு போட்டியிட்டு வெற்றிபெற்றார். பொது மக்களிடம் அவர் செய்த பிரச்சாரம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. முடிவில் லிங்கன் வெற்றி பெற்றார். அடுத்து அமெரிக்க செனட்டுக்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் மிகப் பிரபலமான நீதிபதி ஒருவர் போட்டியிட்டார். அந்த நீதிபதியை லிங்கன் எதிர்த்து நின்றார். இந்தத் தேர்தலின் வெற்றியை அமெரிக்க மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

 Image result for Abraham Lincoln gif

அமெரிக்க தேசத்தின் வரலாறு, அமெரிக்க அரசியல், அன்றைய அமெரிக்க நிலைமை, பல்லாயிரம் நீக்ரோக்களை அடிமையாக நடத்தும் வழக்கம், வெள்ளையர்–கறுப்பர் என்ற பாகுபாடு, தேசத்தைச் சீரழிக்கும் சூழ்நிலை ஆகியற்றை யெல்லாம் தமது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் லிங்கன் குறிப்பிட்டார். லிங்கனின் இந்த அணுகுமுறை அமெரிக்க மக்களிடத்தில் எழுச்சியை உண்டாக்கியது. தேர்தல் முடிவு லிங்கனுக்கு சாதகமாக அமைந்தது. முதன் முதலாக லிங்கன் அமெரிக்க செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு அரசியலைவிட்டு விலகி 5 ஆண்டுகள் தனியார் துறையில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1854ல் லிங்கன் மீண்டும் அரசியலில் நுழைந்தார். குடிப்பழக்கம், புகைக்கும் பழக்கம் எதுவும் இல்லாத லிங்கன் அரசியலில் கடுமையாக உழைத்தார். 1860 ஆம் ஆண்டு அமெரிக்காவின் 16 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி ஆனதும் ஒரு உறுப்பினர், "லிங்கன் அவர்களே உங்கள் அப்பா தைத்த செருப்பு இன்னமும் என் கால்களை அலங்கரிக்கிறது, என நக்கலாக சொல்ல, அது என் அப்பாவின் உழைப்பின் சிறப்பை அல்லவா காட்டுகிறது. பிய்ந்தால் கொடுங்கள் தைத்து தருகிறேன். அதே சமயம் எனக்கு நாடாளவும் தெரியும், என்றார் அமைதியாக. 


பதவியேற்ற இரண்டே ஆண்டுகளில் அதாவது 1862ல் அவர் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்படுவர். அதன்பின் அமெரிக்காவில் அடிமைத்தனம் இருக்கக்கூடாது என்று பிரகடனம் செய்தார். இக்காலத்தில் அமெரிக்காவின் தென்மாநிலங்களில் செல்வந்தர் நிலங்களில் அடிமைகளாக பணிபுரிந்து வந்த பல்லாயிரம் கறுப்பர்கள் சமத்துவ நிலையை அடையாது இன்னலுற்று வந்தனர். லிங்கன் பதவி ஏற்புக்கு சில மாதங்களுக்கு முன்பு ஐக்கிய அமெரிக்காவிலிருந்து தென்பகுதியில் அடிமைக் கொள்கையை ஆதரிக்கும் 7 மாநிலங்கள் ஒன்று சேர்ந்து விலகிச் சென்றனர். அதன் பிறகு மற்றும் நான்கு மாநிலங்கள் அவற்றுடன் சேர்ந்து கொண்டன. 1863 ஜனவரி 1 அன்று ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க கூட்டு மாநிலங்களில் (confederacy) அடிமைகளை நிரந்தரமாய் விடுவிக்கப் புரட்சிகரமான "விடுதலை பிரகடனம்" (emancipation proclamation) ஒன்றை வெளியிட்டார். அதை எதிர்த்து நிராகரித்த 11 தென் பகுதி மாநிலங்களுக்கும் வரவேற்ற மற்ற வடபகுதி மாநிலங்களுக்கும் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கியது.

 Image result for Abraham Lincoln gif

அடிமைகள் ஒழிப்பு பிரச்சனையில் பிளவுபட்ட ஐக்கிய மாநிலங்களை போரிட்டு மீண்டும் ஒன்று சேர்ப்பது ஆபிரகாம் லிங்கனின் பெரும் பிரச்சினை ஆகி நீண்ட போராட்டம் ஆகியது. இதை எதிர்த்தும் ஆதரித்தும் உள்நாட்டுப் போர் தொடங்கியது. 4 ஆண்டுகள் நீடித்த இந்தப் போரில் எதிர்ப்பாளர்கள் தோற்கடிக்கப் பட்டனர். அப்போது மக்களாட்சி குறித்து இவர் பேசியது ‘கெஸ்டிஸ்பர்க் உரை’ என்று உலகப்புகழ் பெற்றுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. 1864ம் ஆண்டில் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் சிறந்த அதிபருக்கான வாக்கெடுப்புகளில் லிங்கன் தொடர்ச்சியாக முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். பல முறை அவர் பெயர் முதலிடம் பெற்றிருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டஓர் ஆய்வின் பொது, லிங்கனைப் பல வரலாற்று ஆய்வாளர்கள் சிறந்த அதிபராக முதலிடத்தில் வரிசைப்படுத்தும் அதே வேளையில் பல சட்டவல்லுநர்கள் அவரை ஜார்ஜ் வாஷிங்டனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறந்த அதிபராக வரிசைப்படுத்துவது அறியப்பட்டுள்ளது. லிங்கனின் படுகொலையினால் அவர் அமெரிக்க மக்களால் "ஒரு தேசியத் தியாகி" என மரியாதை செய்யப்படுகிறார். அடிமைத்தனத்தை ஒழிக்கப் போராடியதால் மக்களால் அவர் ஒரு சிறந்த சுதந்திரப் போராளியாக வணங்கப்படுகிறார்.

 Image result for Abraham Lincoln gif

லிங்கன் ஏப்ரல் 14, 1865ல் பெரிய வெள்ளிழைமையன்று தனது மனைவியுடன் "அவர் அமெரிக்கன் கசின்" என்ற நாடகம் பார்க்க சென்றிருந்தார். அவர் நாடகத்தை ரசித்துகொண்டிருந்தபோது ஜான் வில்ஸ் பூத் என்ற ஒரு நடிகன் அதிபர் லிங்கனை குறி வைத்து சுட்டான். அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த ஆபிரகாம் லிங்கன் ஏப்ரல் 15, 1865ல் தனது 56வது அகவையில் அமெரிக்கா, வாஷிங்டன் நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அமெரிக்காவில் லிங்கனது நினைவாக அவரது பெயரில் பல நினைவு இல்லங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பல சிறிய மற்றும் பெரிய நகரங்களுக்கும் இவரது பெயர் இடப்பட்டுள்ளது.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.





No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...