Saturday, February 20, 2021

மேரி கியூரிக்குப் பிறகு அணுக்கரு மாதிரி ஒன்றை உருவாக்கியதற்காக, நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண் இயற்பியல் அறிஞர் மரியா கோயெப்பெர்ட் மேயர் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 20, 1972).

மேரி கியூரிக்குப் பிறகு அணுக்கரு மாதிரி ஒன்றை உருவாக்கியதற்காக, நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண் இயற்பியல் அறிஞர் மரியா கோயெப்பெர்ட் மேயர் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 20, 1972). 

மரியா கோயெப்பெர்ட் மேயர் (Maria Goeppert Meyer) ஜூன் 28, 1906ல் ஜெர்மனியில் மேல் சைலேசியா (போலந்து) பகுதியில்  கட்டோவிட்சு என்ற ஊரில் பிறந்தார். பிரெடெரிக் கோயெப்பெர்ட்-மரியா நீ உல்ப் என்ற இணையரின் ஒரே மகளாகப் பிறந்தார். ஆறு தலைமுறைகளாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களைக் கொண்டு சிறப்புற்ற குடும்பம் இவருடையது. 1910ல் இவருடைய தந்தை கோட்டின்ஜென் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றச் சென்றதால் இவருக்குத் திருமணம் ஆகும்வரை இவருடைய வாழ்க்கை அதே ஊரிலேயே கழிந்தது. தனியார் பொதுப்பள்ளிகளில் இவருடைய இடைநிலைக் கல்வி அமைந்தது. அங்கு இவருக்கு மிகச்சிறந்த ஆசிரியர்கள் அமைந்தனர். 1924ல் நுழைவுத்தேர்வு எழுதி வெற்றி பெற்று பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அக்காலத்தில் பெண்கள் படிப்பதென்பது மிக அரிதான செயலாகக் கருதப்பட்டது. கொட்டின்ஜெனில் பெண்களுக்கென ஒரு பிரிவு தனியாகச் செயல்பட்டது. மிகச் சிறந்த கணித வல்லுநராக விளங்க வேண்டுமென்ற உணர்வில் படிப்பினைத்தொடர்ந்த மரியாவின் ஆர்வம் சிறிதுசிறிதாக இயற்பியலுக்கு மாறியது. 


குவைய எந்திரவியல் (Quantum Mechanics) பற்றிய ஆய்வுகள் தொடங்கிய காலம் அது. பல்கலைக் கழகத்தில் மாக்ஸ் போர்ன், ஜேம்ஸ் பிராங்க், அடால்ப் ஓட்டோ, ரீன்ஹோல்டு வின்டௌசு, என்ரிக்கோ பெர்மி, வெர்னர் ஐசன்பர்க், பால் திராக் மற்றும் ஒல்ப்காங்க் பாலி போன்ற நோபல் பரிசு பெற்ற அறிவியலறிஞர்கள் இவருடைய ஆசிரியர்களாக அமைந்தனர். 1930ம் ஆண்டில் இவர் 'ஜோசப் ஈ.மேயெர்' என்பவரைத் திருமணம் புரிந்தார். இணையர் இருவரும் திருமணத்திற்குப் பிறகு அமெரிக்காவில் குடியேறினர். இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் பிறந்தனர். 1930ல் மேக்ஸ் பார்னின் வழிகாட்டுதலில் கோட்பாடு இயற்பியலில் ஆய்வுகளை மேற்கொண்டு இரண்டு ஒளியன்கள் உள்ளீர்ப்பு நிகழ்வு (Phenomenon of two photon absorption) ஏற்படுவது பற்றிய கோட்பாடுகளை வெளியிட்டார். செய்முறையில் அவற்றை இவரால் மெய்ப்பிக்க முடியவில்லை என்றாலும் இவருடைய கோட்பாட்டு விளக்கங்களுக்காக முனைவர் பட்டம் பெற்றார். இதன் காரணமாகவே, பின்னாளில் இவை மெய்ப்பிக்கப்பட்டபின் இரு ஒளியன்கள் குறுக்குப் பரப்பிற்குரிய அலகிற்கு(Unit for the two photon cross section) ஜி.எம்.அலகு (G.M.Unit) என இவர் பெயரால் வழங்கப்பட்டது.

 Image result for nuclear model gif

1931ல் பால்டிமோரில் உள்ள 'சான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்' இவருடைய கணவர் பணிபுரிந்தார். ஆணாதிக்க எண்ணங்கள் வேரூன்றியிருந்த அக்காலகட்டத்தில் மரியாவின் விரிவுரையாளர் பணி அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இவர் அங்கு ஊதியம் இல்லாமல் தன்னார்வ ஆய்வாளராகப் பணிபுரிந்தார். இந்தப் பதவி மூலம் இயற்பியல் ஆய்வில் ஈடுபட நிறைய வாய்ப்பு கிடைத்ததோடு ஊதவியும் கிடைத்தது. எட்வர்ட் டெல்லர் என்ற ஆய்வாளரின் நட்பு கிடைத்தது. இருவரும் இணைந்து பல ஆய்வுகளில் ஈடுபட்டனர். கோடை விடுமுறையில் மரியா ஜெர்மனிக்கு வந்து மாக்ஸ் போர்ன் உடனிணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். ஜெர்மனி உலகப் போருக்கு ஆயத்தங்கள் செய்யத் தொடங்கியபோது இவர் அந்நாட்டைவிட்டு வெளியேறினார். அதே சமயம் இவருக்கு 1932ல் அமெரிக்க நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டது. 1939ல் இவர் பிள்ளைப்பேறு காரணமாக இவரது கணவர் ஜோசப் பணியை இழந்தார். இவர்கள் ஹாப்கின்சை விட்டு கொலம்பியா பல்கலைக்கழகம் சென்றானர். 

கொலம்பியா பல்கலக்கழகத்தில் உலோகக்கலவைப் பொருட்களுக்கான பதிலீட்டுப் பொருள்கள் பற்றிய மிக இரகசியமான ஆய்வு ஒன்று நடைபெற்றது. யுரேனியம்-235 உலோகத்தைத் தனியே பிரித்தெடுத்து அதை எரிபொருளாகப் பயன்படுத்தி அணுக்கருப் பிளவு ஆயுதங்கள் செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும். மரியா இந்த ஆய்வில் முக்கியப் பங்கு வகித்தார். ஒளி ஊடுருவாத தன்மை பற்றிய ஆய்வுகளின் போதும் சில காலம் துணை புரிந்தார். இங்குதான் இவ்விணையர் இருவரும் இணைந்து புள்ளியல் எந்திரவியல் (Statistical Mechanics) பற்றிய சிறப்பான பாடநூல் ஒன்றை எழுதி வெளியிட்டனர். 1940-46ல் இவருடைய கணவர் சிகாகோ பல்கலைக்கழகத்திற்கு மாறினார். மரியாவுக்கும் 'சாரா லாரன்ஸ்' கல்லூரியில் ஆசிரியப்பணி கிடைத்தது. கார்ல் எப்.ஹெர்சுபெல்டு (karl F.herzfeld) என்பவர் இவருடைய பணிகளால் கவரப்பட்டு இவருக்கு உதவியதாலும் இவருடைய கணவரின் உதவியாலும் வேதி இயற்பியலறிஞராகத் தன்னை வளர்த்துக் கொண்டார். இருவருடைய உதவிகளினால் இத்துறையில் பல ஆய்வுகளை மேற்கொண்டு ஆய்வறிக்கைகளை வெளியிட்டார். கரிம மூலக்கூறு நிறங்கள் (colour of organic molecules) பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.

 Image result for nuclear energy gif

ஹெரால்டு உரே என்பவர் ஆய்வுக் கூடத்தின் இயக்குநராக இருந்தபோது 'ஒளி வேதி வினைகளின் மூலமாக ஐசோடோப்புகளைப் பிரிப்பது பற்றிய ஆய்வுகளில் இவரை ஈடுபடுத்தினார். இது எந்த வகையிலும் ஐசோடோப்புகளைப் பிரிக்க உதவவில்லை. எனினும் மிகச் சிறந்த தூய இயற்பியல் கோட்பாடாக அது மரியாவுக்கு உதவிற்று. இவற்றில் அதிகளவு ஆர்வஞ்செலுத்தினார். ஒப்புமை இயக்கங்களின் குறிப்பாயங்களுக்கிடையேயான ஒப்புமையை (Frame of References) விளக்கக் கால நீட்டிப்பு (Time dilation) பற்றிய கருத்தை வெளியிட்டார். 1946ல் சிகாகோ சென்று அங்கு அணுக்கரு பற்றிய பிரிவில் பேராசிரியர் ஆனார். அங்குள்ள அர்கோன் தேசிய ஆய்வுச்சாலை (Argonne Natioanal Laboratory) ஒன்றில் பகுதிநேர அலுவலராகவும் பணியாற்றினார். இவரும் எட்வர்ட் டெல்லர் என்பவரும் இணைந்து விண்வெளியில் சிறுவெடிப்பு பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். சிகாகோவிலும் அர்கோனில் பணியாற்றிய போதுதான் அணுக்கரு கூடு அமைப்பிற்கான மாதிரியை உருவாக்கி அதை மேம்படுத்தினார். எட்வர்ட் டெல்லர், என்ரிக்கோ பெர்மி ஆகிய அறிவியலறிஞர்களிடம் அதிகளவு விவாதங்களில் ஈடுபட்டு, அதன் பின்னர் இந்தப் பணியில் மரியா வெற்றிபெற்றார்.

 Image result for nuclear energy gif

1948ல் தந்திர எண்களை (Magic Numbers ) உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். ஓர் அணுவின் உட்கருவில் சில நியூக்கிளியான்கள் அணுவிற்கு நிலைத்தன்மையை அளிக்கின்றன. இது எப்படி என்பது பல அறிவியல் அறிஞர்களுக்கு குழப்பத்தை அளித்தது. இந்த எண்களே தந்திர எண்கள் எனப்பட்டன. 2,8,20,28,50,82 மற்றும்  126 ஆகிய எண்ணிக்கையில் புரோட்டான் மற்றும் நியூட்ரான் உடைய தனிமங்கள் ஏன் அதிக நிலையாக இருக்கின்றன என ஆராய முற்பட்டார். ஓர் அணுக்கருவினுள் புரோட்டான் மற்றும் நியூட்ரான்கள் குறிப்பிட்ட பாதைகளில் சுற்றுகின்றன எனவும் அவற்றின் பாதைகளைக் கூடுகள்(Shells) எனவும் கொள்ளலாம். பாதி நிரம்பிய கூடுகளை விட முழுவதும் நிரம்பிய கூடுகள் அதிக நிலைத்தன்மை கொண்டதாக உள்ளன எனத் தன் ஆய்வின் மூலம் மரியா கண்டறிந்தார். ஆனாலும் அதற்குரிய விளக்கங்களைப் பெற ஓர் ஆண்டு உழைக்க வேண்டியிருந்தது. அதற்குரிய தொடர்புகளை உருவாக்கவும், பல ஆண்டுகள் பணியாற்ற வேண்டியிருந்தது. இதே போல இவர் முன்பின் சந்தித்திராத ஹெக்சல், ஜென்சன், மற்றும் சூயெஸ் என்பவர்கள் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு இதே போன்ற விளக்கங்களை அளித்த பிறகுதான் தன்னுடைய முடிவுகளும் சரியானதே என்று உணர்ந்தார். 




1950ல் ஜென்சனைச் சந்திதார். அதன் பின்னர் இருவரும் இணைந்து இதைப் பற்றிய புத்தகம் ஒன்றை எழுத முற்பட்டனர். அணுக்கருக் கூட்டின் அமைப்பிற்கான அடிப்படைக் கோட்பாடு (Elementary Theory of Nuclear Shell structure) என்ற தலைப்பில் நூல் எழுதினார். 1960ல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியனார். 1963ல் இவருக்கும் 'ஜென்சன்' மற்றும் 'பால் வைனருடன்' சேர்த்து நோபல் பரிசு அளிக்கப்பட்டது. மேரி கியூரிக்குப் பிறகு நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண். தேசிய அறிவியல் கழகத்திலும், கெய்டல்பர்க் அறிவியல் கழகத்திலும் இவர் உறுப்பினராகச் செயல்பட்டார். ரஸ்ஸல் செஜ் கல்லூரி, மவுண்ட் ஹோலியோக் கல்லூரி மற்றும் ஸ்மித் கல்லூரி ஆகியவை இவருக்கு மதிப்பியல் முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தன. இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. கோட்பாட்டு இயற்பியல் (Theoretical Physics) என்னும் பிரிவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் மரியா கோயெப்பெர்ட் மேயர் பிப்ரவரி 20, 1972ல் தனது 65வது அகவையில் சான்டைகோவில் மாரடைப்பால் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.




No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...