மஹாசிவராத்திரி - கண்கள் விழித்திருப்பதல்ல ஓர் இரவாவது அறிவை விழிப்படைய செய்வதே சிவராத்திரி.
சிவராத்திரி என்பதற்கு “சிவனுக்கு உகந்த இரவு” என்பது பொருள். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு, மாத சிவராத்திரியாக போற்றப்படுகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது.
சிருஷ்டிகர்த்தாவான பிரம்மாவிற்கு திடீரென்று ஓர் சந்தேகம் ஏற்பட்டது. ‘நான் தானே இந்த உலகைப் படைப்பவன், நான் இல்லாவிட்டால் இந்த உலகில் உயிர்கள் ஏது, இயக்கம் ஏது? என்று சிந்தித்தான். ஆணவம் அவன் தலைக்கேறியது. உடனே தனது தந்தையான விஷ்ணுவைக் காணச் சென்றான். விஷ்ணு அறி துயிலில் ஆழ்ந்திருந்தார். அவரை எழுப்பி, “ ஏய், நான் உனக்கு மகனாக இருந்தாலும் நானே உன்னை விட உயர்ந்தவன். உன்னைப் போல அன்றி, நான் பிறப்பு, இறப்பு அற்றவன். நான் இந்த உலகத்தைப் படைக்காவிட்டால் எங்ஙனம் நீ காத்தல் தொழிலைச் செய்ய முடியும்? எனவே, நான் உன்னை விட உயர்ந்தவன் என்பதை உணர்ந்து கொண்டு எனக்கு ஏவல் செய்வாயாக’ என்றார்.
அதுகேட்ட விஷ்ணு வெகுண்டார். ”உன்னுடைய தலைகளில் ஒன்றை ஈசன் பறித்து எறிந்த காலத்தில் எங்கே போயிற்று உனது படைப்பாற்றல்? சோமுகாசுரன் உன்னிடம் இருந்த வேதங்களைப் பறித்து எடுத்துச் சென்றபோது எங்கே போனாய் நீ?. நானல்லவோ அதை மீட்டு உலகைக் காத்தேன். ஆகவே நான் என்ற ஆணவத்தை விடுத்து என்னிடம் அடங்கி நடப்பாயாக” என்றார்.
இருவருக்குமான சொற்போர், பெரும் போராக மாறியது. அண்டசராசரம் நடுங்கியது. தேவாதி தேவர்கள், சித்த, முனி, யோகியர்கள் அஞ்சி நடுங்கி ஈசனைச் சரணடைந்தனர். ஈசனும் அபயஹஸ்தம் அருளினார்.
போர் புரிந்து கொண்டிருந்த அயன், அரிகளின் அருகே மிகப் பெரிய பேரொளி ஒன்று தோன்றியது. ”இந்த ஒளியின் அடியையும், முடியையும் எவர் கண்டறிகிறாரோ அவரே பெரியவர்” என்ற அசரீரி ஒலித்தது. உடனே, தாம் தான் பெரியவர் என மற்றவருக்கு நிரூபிக்க வேண்டிய ஆவலில் பிரம்மா அன்னப் பறவையாகி வானில் உயர்ந்தார். விஷ்ணுவோ வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைய அரம்பித்தார்.
ஆனாலும் இருவராலும் ஈசனின் அடி, முடியைக் காண முடியவில்லை. உண்மை உணர்ந்த விஷ்ணு, இது ஈசனின் திருவிளையாடலே என்பதை அறிந்து அவரைச் சரணடைந்தார். ஆனால் ஆணவம் கொண்ட பிரம்மனோ, எப்படியாவது தான் திருமுடியைக் கண்டதாகப் பொய் செல்லியாவது போரில் வெற்றி பெற நினைத்தார். அப்போது திருமுடியிலிருந்து தவறி விழுந்து கொண்டிருக்கும் தாழம்பூவைக் கண்டார். தான் திருமுடியைக் கண்டதாகவும், அதை தாழம்பூ பார்த்ததாகவும் பொய் சாட்சி கூற வலியுறுத்தினார். பிரம்மனே தன்னிடம் கெஞ்சுவதைக் கண்டு ஆனந்தப்பட்ட தாழம்பூவும் அதற்குச் சம்மதித்தது.
அதனை சாட்சியாக வைத்து, தான் திருமுடியைக் கண்டதாகவும், அதற்கு இந்த தாழம்பூவே சாட்சி என்றும் அடி முடி காண இயலாத பேரொளியிடம் பொய் கூறினார் பிரம்மா.
பேரொளி வெடித்துச் சிதற ஈசன் அளவிலாச் சீற்றத்துடன் அதிலிருந்து வெளிப்பட்டார். ”பிரம்மனே! என் திருவடியைக் காணாமலேயே கண்டு விட்டதாகப் பொய் புகன்ற உனக்கு இனி இவ்வுலகில் திருக்கோயில்களும், வழிபாடும் இல்லாமல் போகட்டும்” என்று சாபம் இட்டார். பொய் சாட்சி கூறிய தாழம்பூவிடம், ”நீதி தவறிய உன்னை இனி என் பக்தர்கள் யாரும் பூஜைக்குப் பயன்படுத்த மாட்டார்கள்” என்று சபித்தார்.
சாபம் விடுத்தும் சீற்றம் அடங்காத சிவன் அக்கினிப் பிழம்பாய்த் தகிக்க, அஞ்சிய பிரம்மனும், விஷ்ணுவும் தங்கள் பிழை பொறுக்குமாறு வேண்டித் துதிக்க, முனிவர்கள் வேதம் ஓதி முழங்க, தேவர்கள் பாடித் துதிக்க, ஈசன் குளிர்ந்தார். அண்ணாமலையாய், அருணாசல லிங்கமாய் அமர்ந்தார்.
ஈசன் இவ்வாறு ஜோதிப் பிழம்பாய்த் தோன்றி பிரம்ம, விஷ்ணுக்களின் ஆணவம் அகற்றி மன்னுயிர்களை மாபெரும் அழிவிலிருந்து காத்த அந்த இரவுதான் மஹா சிவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
பகவான் ரமணரும் இதனை
ஆதிஅரு ணாசலப்பேர் அற்புதலிங் கத்துருக்கொள்
ஆதிநாள் மார்கழியில் ஆதிரையச் – சோதியெழும்
ஈசனைமால் முன்அமரர் ஏத்திவழி பட்டநாள்
மாசிசிவ ராத்திரியா மற்று
என்கிறார்.
சிவராத்திரியின் மகிமை பற்றி இதுவரை நீங்கள் அறியாத விஞ்ஞான பூர்வமான ஒரு தெய்வீக ரகசியம் இன்று நம் சித்தர்களின் குரலில்.....
"லூமினிபெரஸ் ஈத்தர்" (Luminiferous Eather) எனப்படும் ஒரு பிரம்மாண்ட சக்தி மகா சிவராத்திரி அன்று மட்டுமே ராக்கெட் வேகத்தில் ஸ்பிரிங் என்ற தன்மையில் பூமியை நேரடியாக வந்து இறங்கும். இந்த நேரத்தில் முதுகை நேராக வைத்து தூங்காமல் இருந்தால் அபரிமிதமான சக்தி கிடைக்கும். இதனால் பல நன்மைகள் உண்டு. இந்த சக்தி வேறு எந்த நாளும் கிடைக்காது. எனவேதான் மகாசிவராத்திரியன்று தூங்காமல் விழித்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
அறிவியல் பூர்வமாக ஆதாரம் வேண்டும் என்றால் இங்கே நான் கொடுத்திருக்கும் சில படங்களை பார்த்துக்கொண்டே நான் சொல்வதைக் கேளுங்கள். ஈத்தர் எனப்படும் சக்தி தான் இந்த உலகத்தை இயக்குகிறது. இந்த ஈத்தர் உலகம் முழுவதும், அண்டவெளி முழுவதும் நிறைந்து இருக்கிறது. மேலும் பூமியை நோக்கி ஒவ்வொரு வினாடியும் வந்துகொண்டே இருக்கிறது. பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் இரண்டு நீள்வட்ட பாதையில் உள்ளது. ஓன்று சிறிய நீள்வட்டப் பாதை, மற்றொன்று பெரிய நீள்வட்டப் பாதை. பூமி பெரிய நீள்வட்டப்பாதையில் இருந்து சிறிய நீள்வட்ட பாதைக்கும் மாறும் நேரம் தான் இந்த மகா சிவராத்திரி நேரம். ( படம் பார்க்கவும் )
மேலும் ஈத்தர் என்ற சக்தி எப்பொழுதும் பூமியை நோக்கி வந்து கொண்டே இருக்கிறது. வருடத்தில் ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் ஈத்தர் சக்தி சற்று அதிகமாக இருக்கும். ஆனால் வருடத்தில் ஒருமுறை வரும் மாசி மாத சிவராத்திரி மட்டும் அபரிமிதமாக, அளவுக்கு அதிகமாக சக்தி இருக்கும். இதற்கு நிகர் வேறு எந்த மதமும் இருப்பதில்லை. எனவேதான் இந்த சிவராத்திரியை மகா சிவராத்திரி என்று அழைக்கிறார்கள்.
ஈத்தர் சக்தி இரண்டு விதமான தன்மைகளில் பூமியை நோக்கி வரும் ஒன்று ஸ்பிரிங் (SPRING) , இரண்டு ஃபால் ( FALL ). இதில் ஸ்பிரிங்க்கு சக்தி அதிகம். ஃபால்க்கு சக்தி குறைவு. ( படம் பார்க்கவும் )
மாசி மாசம் மகா சிவராத்திரியில் வரும் ஈத்தர் ஸ்பிரிங் தன்மைகொண்டது. இதற்குத் தான் அதிக சக்தி உண்டு. ஏனென்றால் ஈத்தர் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும், பூமி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி சுற்றிக்கொண்டிருக்கும். எனவே நேரடியாக முழு சக்தியை இந்த மகாசிவராத்திரியில் மட்டுமே கிடைக்கும். அதேசமயம் 180 கோண மாற்றத்தில், ஆவணி மாதத்திலும் ஈத்தர் கிடைக்கும். ஆனால் அது ஃபால் என்ற தன்மையில் இருக்கும் அதற்கு சக்தி குறைவு. மேலும் பூமி சுற்றி நகரும் அதே திசையில் ஈத்தரும் பின்தோடர்ந்து வருவதால் சக்தி குறைவாக இருக்கிறது.
புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், ஈத்தர் 24 மணி நேரமும் பூமியை நோக்கி சைக்கிள் வேகத்தில் வரும். ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரியில் புல்லட் வேகத்தில் வரும். ஆவணி, ஆடி மாதத்தில் கார் வேகத்தில் வரும். மாசி மாசம் மட்டும் ராக்கெட்டில் வேகத்தில் வரும். மகா சிவராத்திரி அன்று பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடு இரவு 12 :15 AM முதல் 12: 45 AM வரை உச்சகட்ட ஈத்தர் சக்தி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே இந்த நேரம் சிறப்பான நேரம். இந்த நேரம் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறும்.
இந்த லூமினிபெரஸ் ஈத்தர்" (Luminiferous Eather) பல மதங்களில், பல மார்க்கங்களில் இறைவன், கடவுள், பிரமாண்டம், இறைத்துகள் ஆற்றல், பேரறிவு, பிரபஞ்சம், பரமாத்மா மற்றும் அண்டம் என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக கிமு நான்காம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில் பல கண்டுபிடிப்புகளை கொடுத்துள்ளார். மேலும் 17 ம் நூற்றாண்டு முதல் ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டீன் மற்றும் அகஸ்டின் போன்ற பல்வேறு விஞ்ஞானிகளும் இதைப்பற்றி வேறு வேறு பெயர்களில் கூறியிருக்கிறார்கள்.
மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்து, தூங்காமல், முதுகை நேராக வைத்து, விழித்திருந்து தியானம் செய்வது மிக மிக மிக மிக மிக சிறப்பு. ஈதர் உச்சந்தலையில் உள்ள சகஸ்ரார சக்கரத்தின் வழியாக பீனியல் கிளாண்ட் என்ற ஆனந்த சுரப்பி என்ற ஆனந்த மூளையை அடைந்து பலவிதமான நல்ல ஹார்மோன்களை சுரக்கும். இந்த நேரத்தில் நமக்கு நாமே நம்மை ஆசிர்வாதம் (Self Blessing) செய்து கொள்ளும் பொழுது இது நமது டி என் ஏ (DNA) ல் கெட்ட பதிவுகளை (கர்மா) அழிக்கும் வல்லமை உள்ளது.
மகா சிவராத்திரியில் பகலில் சக்தி கிடைக்காதா?
பகலில் சூரிய வெளிச்சம் இருப்பதால் ஈத்தர் சக்தி சற்று குறைவாக இருக்கும். இரவில் சூரிய வெளிச்சம் இல்லாததால் சக்தி அதிகமாக இருக்கும். இரவு 9 மணிக்குத்தான் மெலடோனின் (Melatonin) என்ற ஒரு திரவம் நமது உடலில் சுரக்கும். மேலும் காலை 2 மணிக்குத்தான் நாம் பிரபஞ்சத்தோடு மிகவும் நெருக்கமாக இணைந்திருக்கும் நேரம். எனவே இரவு 9 மணி காலை 2 மணி வரை தான் அதிக சக்தி பெறும் நேரம் எனவே இரவில் கண் விழிக்கிறார்கள். அதை சிர்காடியன் ரிதம் என்று அழைப்பர். (Circadian Rhythm)
மகா சிவராத்திரி ஏன் இந்தியாவில் மட்டும் இருக்கிறது மற்றும் நாடுகளில் இல்லை?
நமது நாட்டில் மட்டும்தான் ஆசான்கள் உள்ளதை உள்ளபடி அனைவருக்கும் ஓபனாக சொல்கிறார்கள். பல நாடுகளில் இந்த விஷயத்தை ஆசான்கள் மட்டும் புரிந்து தான் மட்டும் பயிற்சி செய்து சக்தியை எடுத்துக் கொள்கிறார்கள். மேலும் பல நாடுகளில் இதுபோன்ற விஷயங்கள் யாருக்கும் தெரிவதில்லை. நண்பர்களே, இதை தான் "தூக்கம்" என்ற தலைப்பில், இரவு படுத்து தூங்குவதை விட உட்கார்ந்து தூங்குவதே சிறப்பு என்று நான் பத்து வருடமாக பேசி வருகிறேன்.
இந்த ஈத்தரைத்தான் "ஈசன்" என்று சிலர் அழைக்கிறார்கள். ஈசனை தான் சிவன் என்று அழைக்கிறார்கள். "ஈத்தர் ராத்திரி" என்பது தான் சிவராத்திரி என்று கூறப்படுகிறது. இப்படி அறிவியல் பூர்வமாக சொன்னால் சிலருக்கு மட்டுமே புரியும் என்பதற்காக, ஞானிகள் பல கதைகளைச் சொல்லி அனைவரையும் தூங்காமல் முழிக்க வைத்து சக்தி கிடைக்க செய்திருக்கிறார்கள்.
🙏🙏🙏🙏🙏
அனைத்து ஆபத்துக்களில் இருந்தும் தப்புவதற்காக ஒரு பிராமணன் விழித்திருந்த இரவு..
நமது நாட்டு காலண்டர்களில் சிவராத்திரிக்கு ஒரு சித்திரம் வரைந்திருப்பார்கள். ஒரு பிராமணன் வில்வ மரம் ஒன்றில் ஏறியிருப்பான். அவனுடைய கைகளில் இருந்து இலைகள் மரத்தின் கீழே உள்ள சிவலிங்கத்தில் விழுந்து கொண்டிருக்கும். மரத்தின் கீழ் ஒரு புலி அவனையே பார்த்தபடி இருக்கும். அவனுடைய வாயில் இருந்து சிவ.. சிவ.. என்ற நாமம் வந்து கொண்டிருக்கும்…
காலண்டரைப் பார்த்ததும் இன்று சிவராத்திரி என்று தெரிந்து கொள்வோம்..
யாரிந்தப் பிராமணன்.. ? இவனுடைய கதை என்ன..? பாட்டி சொன்ன கதை..
காட்டு வழியாக ஒரு பிராமணன் சென்று கொண்டிருந்தான், அவனை ஒரு புலி விரட்ட ஆரம்பித்தது. வேகமாக ஓடிச்சென்று வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். அவன் கீழே இறங்குவான் என்று புலி மரத்தின் கீழே விழித்துக் காத்திருந்தது.
மரத்தில் இருந்த பிரமணனுக்கு உறக்கம் வந்தது. அவன் வில்வ மரத்து இலைகளை பறித்து சிவ சிவா என்றபடி கீழே போட ஆரம்பித்தான். மரத்தின் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது அவனுக்கு தெரியாது. அதுபோல அந்த நாள் சிவராத்திரி என்றும் அவனுக்கு தெரியாது.
ஆனால் அவன் சிவராத்திரியன்று விழித்திருந்து வழிபட்ட காரணத்தால் புலியை விரட்டுகிறான் இறைவன்.. பின் அவனுக்கு மோட்சமும் கிடைக்கிறது.
ஆக..
சிவராத்திரியன்று கண்விழித்திருந்தால் சிவனுடைய அருள் கிடைக்கும் என்ற செய்தி மனதில் பதிந்து கொள்கிறது.
சிவராத்திரி வந்துவிட்டது நாமும் ஏதாவது செய்ய வேண்டுமே என்ன செய்யலாம்… ?
சிறுவர்கள் வீட்டுக்கு வீடு கண்விழித்திருக்க முடிவு செய்வார்கள்..
ஊஞ்சல் கட்டி ஆடுவது, விசேட உணவு செய்து உண்பதென அறுபதுகளில் இருந்த சிவராத்திரி எழுபதுகளில் கோழி, ஆடு நூடில்ஸ் போடுமளவுக்கு விரிவடைந்தது..
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment