Monday, April 12, 2021

பூமியை விட்டு விண்வெளியில் குடியேற ஆசையா? - மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம் இன்று (ஏப்ரல் 12).

பூமியை விட்டு விண்வெளியில் குடியேற ஆசையா? - மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச தினம் இன்று (ஏப்ரல் 12). 

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் ஏப்ரல் 12, 1961ல் இரஷ்ய யூரி ககாரின் வஸ்டொக்-1 விண்கலத்தில் பயணம் செய்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாகத் தரையிறங்கினார். யூரி ககாரின் நினைவாக ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. யூரி ககாரின் நினைவாக மனித விண்வெளிப் பயணத்துக்கான உலக தினத்தை ஆண்டுதோறும் ஏப்ரல் 12 தேதி கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏப்ரல் 7, 2011ல் தீர்மானம் நிறைவேற்றியது. ரஷியாவினால் இதற்கான முன்மொழிவு கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது. விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்சி செய்வதாகும். 

மனிதன் தோன்றி அண்ணாந்து பார்த்தது முதல், அவன் விண்வெளியைப் பற்றியும், அங்கு மின்னுவது என்ன? என்றும் யோசிக்க ஆரம்பித்துவிட்டான். அவன் விண்ணில் தோன்றும் பொருட்களை கூர்ந்து கவனித்து பல்வேறு விஷயங்களை அறிந்து கொண்டான். எழுத்துகளாகவும், படங்களாகவும் சில குறிப்புகளை எழுதிவைத்தான். நிலவு, சூரியன் பற்றி அவன் கொஞ்சம் அதிகமாக அறிந்து கொண்டான். விண்வெளியில் மினுங்கும் நட்சத்திரங்கள் பற்றி தொலைநோக்கி பயன்பாட்டிற்கு முன்பு மனிதன் அவ்வளவாக அறியவில்லை. இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட வடிவத்தில், திசையில் தோன்றும் நட்சத்திரங்கள், நட்சத்திர கூட்டங்கள் பற்றி கணித்து வைத்திருந்தான். தொலைநோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பின்பு மனிதனின் விண்வெளி சிந்தனை விரிவடைந்தது. பல தேடல்களுக்கு விடை கிடைக்கத் தொடங்கியது. அதுவரை பார்க்காத பல விண்வெளி ரகசியங்களை பார்த்து அறிந்து கொண்டான். 

மனிதனின் விண்வெளி பயணம் 1957ல் தொடங்கியது. அப்போது முதல் செயற்கை கோளை பறக்கவிட்டான். மனிதன் விண்வெளியில் உயிருடன் பயணிக்க முடியுமா? என்பதை லைகா எனும் நாயை விண்வெளிக்கு அனுப்பி சோதித்து அறிந்தான். பின்னர் மனிதனே பாதுகாப்பு கவசங்களுடன் விண்வெளிக்கு சென்று திரும்பினான். இப்போது ஆயிரக்கணக்கான செயற்கை கோள்களும், விண்கலங்களும் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுவிட்டன. மனிதனும் பலமுறை விண்வெளி சென்று திரும்பியிருக்கிறான். விண்வெளி பயணத்தின் மைல்கல் சாதனைகளாக பல உண்மைகளை கண்டுபிடித்திருக்கிறான். சில அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான். 

இருந்தாலும் விண்வெளி தன்னுள் பொதிந்து வைத்திருக்கும் ரகசியங்கள் இன்னும் மனிதனை வியப்படையவே செய்து கொண்டிருக்கின்றன. விண்வெளி என்பது ஈர்ப்புவிசையற்ற வெற்றிடம். அங்கு கோள்களும், நட்சத்திரங்களும், பாறைகளும், பல பருப்பொருட்களும் மிதந்து கொண்டிருக்கின்றன. விண்வெளி வெற்றிடமாகவும், காற்று போன்ற ஊடகம் இல்லாததாலும் அங்கு காலநிலை மாற்றங்கள் ஏற்படுவதில்லை. நட்சத்திரங்களுக்கு அருகில் உள்ள பகுதியில் ஒளிக்கதிர்களை காணலாம். மற்ற இடங்கள் இருட்டாகவே காட்சியளிக்கும். அந்த இருளில் நடக்கும் பல அதிசயங்கள் இன்னும் மனிதன் அறிந்து கொள்ளாதவை. 

விண்வெளியில் ஒரு ஆய்வுக்கூடம் அமைத்து பூமியையும், பூமிக்கு வரும் விண்வெளி தகவல்களையும், மற்ற கிரகங்கள், நட்சத்திரங்களின் கதிர்வீச்சுகளையும் ஆராய்ந்து வருகிறோம். நிலவில் கால்பதித்திருக்கிறோம். செவ்வாயில் ஆய்வுக் கலங்களை இறக்கியிருக்கிறோம். சூரிய குடும்பத்தின் கடைசி எல்லை வரை செயற்கை கோளை அனுப்பி சாதித்திருக்கிறோம். மனிதனின் முக்கியமான விண்வெளி ஆசைகளில் குறிப்பிடத்தக்கது, பூமியைப் போன்ற மற்றொரு கிரகத்தை தேடி அதில் குடியேறுவது. நிலவு மற்றும் செவ்வாய் கிரகம் பற்றி பல்வேறு உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளதால் அதில் குடியேற்றங்களை நிறுவுவது விண்வெளி ஆய்வாளர்களின் லட்சியங்களில் ஒன்றாக உள்ளது. இதில் பல நாடுகளுக்கு இடையே போட்டியும் உள்ளது. தற்போது தனியார் நிறுவனங்கள்கூட விண்வெளி ஆய்வுப் போட்டிகளில் பங்கெடுக்கின்றன.

 TED-Ed - Gifs worth sharing

ஆனால் விண்வெளி குடியேற்றம் அவ்வளவு எளிதானதல்ல? என்பது விஞ்ஞானிகள் அறிந்ததுதான். சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கியிருக்கும் விஞ்ஞானிகளின் உடலில் ஏற்படும் வினோத மாற்றங்களை சமாளிப்பதில்கூட பல்வேறு சவால்கள் இருக்கின்றன. சர்வதேச விண்வெளி மையத்தில் 90 நிமிடங்களுக்கு ஒருமுறை சூரியனை பார்க்க முடிகிறது. அதனால் அவர்களின் தூக்கம் மற்றும் அன்றாட செயல்களில் பல்வேறு தாக்கங்கள் ஏற்படுகின்றன. இரட்டையர்களில் ஒரு விஞ்ஞானியை விண்வெளியில் தங்கச் செய்து மற்ற ஒருவரை பூமியில் இருக்கச் செய்து ஆய்வு செய்தபோது அவர்களின் மரபணுக்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

 Space Travel GIF by Moby Motion - Find & Share on GIPHY

எனவே விண்வெளி வாழ்க்கையானது இதயத்துடிப்பு, உடற்கூறு, மரபணு உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் மனிதனின் விண்வெளி வாழ்க்கை, அவனை மாற்றியமைக்குமே தவிர தனக்கேற்றபடி விண்வெளியை மாற்றி வாழ முடியாது என்பதை உணர்த்துவதாக அமைந்துள்ளது. அங்குள்ள ஈர்ப்புவிசை மாற்றங்கள் மற்றும் கதிர்வீச்சுகளே இதற்கு காரணமாகும். விண்வெளியில் ஆடை மாற்றுவது, கழிவறை பயன்படுத்துவது உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் சவால் உள்ளது. சமையல் செய்ய விரும்பி உப்பு, மிளகு போன்றவற்றை அள்ளித் தூவ நினைத்தால் அவை வெற்றிடத்தில் மிதந்து கண்ணின் உள்ளோ, மூக்கின் உள்ளோ நுழையலாம். கவச உடை அணிந்திருந்தால் தப்பிக்கலாம். விண்வெளியில் நிலவும் காஸ்மிக் கதிர்வீச்சு பாதிப்பு மனிதனை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பது பற்றிய தெளிவான முடிவு இன்னும் கிடைக்கவில்லை. 

மனிதனின் விண்வெளி ஆசை இதுவரையில் சர்வதேச விண்வெளி மையத்தில் அதாவது சுற்றிலும் பூமிபோல கவசம் ஏற்படுத்தப்பட்ட விண்வெளி கூண்டிற்குள்தான் சாத்தியமாகி இருக்கிறது. அதிலும் பல சவால்கள் இருக்கவே செய்கின்றன. இப்போது ஈர்ப்புவிசை ஏற்படுத்தப்பட்ட அறையில் மட்டும் அவர்களால் உலவவும், சமைத்து சாப்பிடவும் முடிகிறது. அதைத் தாண்டிய விண்வெளியில் மனிதனின் செயல்பாடு வெற்றிகரமாக இல்லை. ஆபத்து நிறைந்ததாகவே உள்ளன. அமெரிக்காவின் நாசா ஆய்வு மையமும், ஒரு தனியார் நிறுவனமும், செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் ஆராய்ச்சிகளை தீவிரமாக்கி வருகின்றன. அவர்களின் ஆராய்ச்சியும், மனிதனின் விண்வெளி வாழ்க்கை கனவும் நிறைவேற நாம் இன்னும் காத்திருக்க வேண்டும் என்பதே உண்மை.

 

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எண்ணம் 19ம் நூற்றாண்டின் பின் பாதியிலிருந்து விஞ்ஞான புனைக் கதைகளிலில் இடம் பெற்று வந்துள்ளன. எட்வர்ட் எவரெட் ஹேல் என்ற எழுத்தாளர் 1869 ஆம் ஆண்டில்  எழுதிய 'தி பிரிக் மூன்' என்னும் கற்பனை  கதையில் முதன் முதலில் விண்வெளிக்கு மனிதனை அனுப்புவது பற்றி எழுதியிருந்தார். விண்வெளி ஆய்வுப் பயணத்தில் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ம் தேதி, சோவியத் ஒன்றியத்தினால் ஆளில்லாத விண்கலமான ஸ்புட்னிக் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நவம்பர் 3,1957 அன்று லைக்கா என்ற நாய் முதல் முறையாக புவி சுற்றுப் பாதையை சுற்றி வர அனுப்பப்பட்டது. புவி சுற்றுப்பாதையை சுற்றி வந்த முதல் ஜீவராசி இது. ஏப்ரல் 12, 1961ல்  விண்வெளியில் முதல் மனிதர், சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த விண்வெளி வீரர் யூரி ககாரின் ‘வோஸ்டாக் 1’ விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்குச் சென்றார். 108 நிமிடம் விண்வெளியில் இருந்த அவர் புவியை ஒரு முறை சுற்றிவந்தார். விண்வெளியில் இருந்தபடி, “நான் புவியைக் காண்கிறேன். அது மிகவும் அழகாக இருக்கிறது” என்று அவர் கூறியதுதான் விண்வெளியில் உச்சரிக்கப்பட்ட முதல் வாக்கியம். மே 5, 1961ல் விண்வெளியில் முதல் அமெரிக்கர் பி. ஷெப்பர்ட். 15 நிமிடங்கள் விண்வெளியில் இருந்தார். ஜூன் 16, 1963ல் விண்வெளியில் முதல் பெண் வாலெண்டினா தெரஸ்கோவா விண்வெளிக்குச் சென்றார். 70 மணி நேரம் 50 நிமிடங்கள் விண்வெளியில் தங்கிய அவர், 45 முறை புவியைச் சுற்றிவந்தார். 

மார்ச் 18, 1965ல் விண்வெளியில் நடந்த முதல் மனிதர் சோவியத்தின் அலெக்ஸி லியோனவ். ஜூலை 20, 1969ல் அப்போலோ விண்வெளி வீரர்கள் நீல் ஆம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் இருவரும் நிலவில் கால்பதித்த, நடந்த, முதல் மனிதர்கள். இவர்கள் நிலவில் இறங்கியதை லட்சக்கணக்கான மக்கள் தொலைக்காட்சியில் பார்த்தனர். நிலவில் இரண்டு மணி நேரம் இருந்த ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் ஒளிப்படங்கள் எடுத்தனர். நிலவில் இருந்த பாறைகளின் மாதிரிகளைச் சேகரித்தனர். நிலவு பயணத்துக்கு ‘அப்போலோ 11’ விண்கலம் பயன்படுத்தப்பட்டது. இவர்கள் இருவரும் நிலவில் இருந்தபோது நிலவின் சுற்றுப்பாதையில் மைக்கேல் காலின்ஸ் விண்கலத்தை இயக்கிக்கொண்டிருந்தார். ஏப்ரல் 2, 1984ல்  விண்வெளியில் முதல் இந்தியர்,  இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் ராகேஷ் ஷர்மா சோவியத் விண்கலம் ஒன்றில் விண்வெளியை அடைந்து புவியைச் சுற்றிவந்தார். இவர் எட்டு நாட்கள் ‘சால்யுட் 7’ விண்வெளி நிலையத்தில் தங்கினார். நவம்பர் 19, 1997ல் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவின் நாசாவில் பணியாற்றிய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா. புவிக்குத் திரும்பக்கூடிய கொலம்பியா விண்கலத்தில் (space shuttle) விண்வெளிக்குப் பயணித்தார். விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் இவர்தான். பிப்ரவரி 1, 2003 அன்று கொலம்பியா விண்கலம் தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் கல்பனா சாவ்லா உட்பட ஏழு பேர் பலியாயினர். 

அக்டோபர் 29, 1998ல்  நாசாவின் ‘டிஸ்கவரி’ விண்கலத்தில் பயணித்த அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் கிளென் விண்வெளிக்குச் சென்ற மிக முதிய மனிதர் ஆவார். அப்போது அவருக்கு வயது 77. ஏப்ரல் 28, 2001ல் ரஷ்யா, சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பிய ராக்கெட்டில் 2 கோடி டாலர் பணம் செலுத்திப் பயணித்தார் அமெரிக்கத் தொழிலதிபர் டென்னிஸ் டிடொ. பணம் கொடுத்து விண்வெளிக்குச் சென்றதால் இவர் முதல் விண்வெளிப் பயணி என்று அறியப்படுகிறார். அக்டோபர் 18, 2003ல்ஷென்ஸோ 5’ விண்கலத்தின் மூலம் விண்வெளியை அடைந்தார் யாங் லிவீ. இவரே விண்வெளியில் கால்பதித்த முதல் சீனர்.

 

இந்தியா முதல்முறையாக 2022ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ‘ககன்யான்’ (விண் நிலையம் என்று அர்த்தம்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வியோமித்ரா (Vyommitra), அவளால் பேச முடியும், மற்ற மனிதர்களை அடையாளம் காண முடியும், மற்ற விண்வெளி வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அவளால் பிரதிபலிக்க முடியும், அவளால் உரையாடல்களை நடத்தவும் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் முடியும். என்ன விண்வெளியில் இதையெல்லாம் செய்யும் பெண்ணா? என்று தானே யோசிக்கிறீர்கள். ஆம் பெண்தான். ஆனால் மனித பெண் அல்ல.  இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கிய விண்வெளி பாதி மனித உருக்கொண்ட பெண் ரோபோ. வியோமித்ரா ஒரு ‘ஹாஃப்-ஹியூமனாய்டு’ ஆவாள், இவளை சோதனை விமானங்களின் ஒரு பகுதியாக விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணத்தின் லட்சிய ஏவுதலுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும்.

 விண்வெளியில் சொகுசு ஹோட்டல்! - ஒரு நபருக்கு செலவு எவ்வளவு தெரியுமா? |  First-ever luxury hotel in space announced

விண்வெளிப் பயணம் விண்வெளி ஆய்விலும், விண்வெளி சுற்றுலா மற்றும் செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு போன்ற வணிக நடவடிக்கைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. விண்வெளிப் பயணத்தின் வணிக ரீதியற்ற கூடுதல் பயன்பாடுகளில் விண்வெளி கண்காணிப்பகங்கள், உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் பிற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் அடங்கும். ஒரு விண்வெளிப் பயணம் பொதுவாக ஒரு ராக்கெட் ஏவுதலுடன் தொடங்குகிறது. இது ஈர்ப்பு சக்தியைக் கடப்பதற்கான ஆரம்ப உந்துதலை வழங்குகிறது. பூமியின் மேற்பரப்பில் இருந்து விண்கலத்தை செலுத்துகிறது. சில விண்கலங்கள் காலவரையின்றி விண்வெளியில் உள்ளன. 

முதல் மனிதன் விண்வெளிக்குச் சென்றபோது பலருக்கு இப்போதே நினைவில் இருக்காது. ஆனால் வேற்று கிரக இடத்தின் வளர்ச்சி மனிதகுலத்திற்கு அதிகமாகக் தருகிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பூமியை விட்டு வெளியேற முடியும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. எல்லாம் முன்னால் உள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏப்ரல் 12 என்பது சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம், ஒரு நபர் பிரபஞ்சத்தை மீறிய நாள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.







இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை

விண்வெளியில் முளைத்த காராமணி விதை இஸ்ரோ சாதனை. நாட்டின் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சியின் ஒருபகுதியாக நுண் புவி ஈர்ப்ப...