Saturday, May 8, 2021

ஆக்சிசனும் ஹைட்ரஜனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதை கண்டறிந்த தற்கால வேதியலின் தந்தை, பிரான்சிய வேதியலாளர் லாரன்ட் டி லவாய்சியர் நினைவு நாள் இன்று (மே 8, 1794).

ஆக்சிசனும் ஹைட்ரஜனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதை  கண்டறிந்த  தற்கால வேதியலின் தந்தை, பிரான்சிய வேதியலாளர் லாரன்ட் டி லவாய்சியர் நினைவு நாள் இன்று (மே 8, 1794). 

அன்டோயின்-லாரன்ட் டி லவாய்சியர் (Antoine-Laurent de Lavoisier) ஆகஸ்ட் 26, 1743 ல் பாரிசில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தார். ஐந்து வயதிலேயே தனது தாயாரை இழந்தார். மாசாரின் கல்லூரியில் 1754 முதல் 1761 வரை வேதியல், தாவரவியல், வானவியல், கணிதமும் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் தனது தந்தையின் வழியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். எனினும் அவர் சட்டம் பழகவில்லை லவாய்சியருக்கு ஆராய்ட்சிகள் செய்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் குறிப்பாக வேதியியலில் அதிக ஆர்வம் காட்டினார். தனது 25 ஆம் வயதில் பிரான்சிய அறிவியல் கழகத்தின் உறுப்பினரானார். 1769ல், அவர் பிரான்சின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்குவதில் பங்காற்றினார். 1771 ல், தனது 28 ஆவது வயதில், 13-வயதான மேரி-அன்னே என்பவரை மனந்துகொண்டார். காலப்போக்கில் அவர் தனது கணவருக்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்தார். லவாய்சியர் அவரது மனைவியினதும் ஓவியம் யாக்கசு-லூயீசு டேவிட்டினால் 1788ல் வரையப்பட்டது. 

இரிச்சர்டு கிர்வன் மற்றும் சோசப்பு பிரீசிட்லி ஆகியோருடைய ஆங்கில கட்டுரைகள், ஆராய்ச்சிகளை பிரான்சிய மொழியில் மொழிபெயர்த்தார். தனது கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்காக மேரி பல ஆய்வக துணைக்கருவிகளை வடிவமைத்துள்ளார். இலவாசியே எழுதிவைத்த நிணைவுக்குறிப்புகளை இவர் திருத்தி வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்ட வேதியல் தொடர்பான கருத்துகள் இன்றும் பல்வேறு அறிவியல் அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. 1766 ஆம் ஆண்டு பாரிசின் தெருக்களில் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று இலவாசியே கருத்துரைத்தார். அதற்காக அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. வெடிகுண்டு தூள் அதிகாரியாக அவர் பணியாற்றியபோது வெடித்தல் பற்றியும் எரியும் தன்மை பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். ஓர் உலோகத்தை எரித்தால் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை லவாய்சியர் சோதனைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார். இதேபோன்ற இன்னும் பல முக்கிய கண்டுபிடிப்புகளை அவர் செய்தார். அந்தக் காலகட்டத்தில் இயற்பியல், கணிதம், வானவியல் போன்ற அறிவியல் துறைகள் கண்டிருந்த வளர்ச்சியை வேதியியல் கண்டிருக்கவில்லை, அது பெருமளவு பின்தங்கியிருந்தது. 

அந்தக் காலகட்டத்தில் வேதியியலார் பல்வேறு தனிப்பட்ட உண்மைகளைக் கண்டு கூறியிருந்தனர். அவையெல்லாம் சிதறி ஒருங்கிணைக்கப்படாத உண்மைகளாக இருந்தன. மேலும் பல தவறான கருத்துகளும் நிலவின. காட்டாக காற்றும் தண்ணீரும் கூட்டுப்பொருள்கள் (compounds) என்பது பற்றிய கருத்து, லவாய்சியரின் வருகைக்கு முன் காற்றும் தண்ணீரும் தனிமங்கள் என்று தவறாகக் கருதப்பட்டது. மேலும் நெருப்பின் தன்மைப் பற்றியும் மிகத் தவறான கருத்து நிலவியது. எல்லா எரியக்கூடியப் பொருள்களும் 'புளோஜிஸ்டான்' எனப்படும் பொருளை வெளியேற்றுவதாக அக்கால வேதியலாளர் நம்பினர். இந்த தவறான கருத்துக்களையெல்லாம் மாற்றி அமைத்தார் இலவாசியே. 'புளோஜிஸ்டான்' என்று எந்தப்பொருளும் கிடையாது என்பதை முதலில் சோதனைகள் மூலம் நிறுவினார். வேதியல் கலப்பினால்தான் நெருப்பு எரிகிறது என்பதை இலவாசியே கண்டு சொன்னார்.

 Antoine Lavoisier GIFs - Get the best GIF on GIPHY

சோசப்பு பிரீசிட்லி கண்டறிந்து தனிமைப்படுத்திய வளிமத்துக்கு ஆக்சிசன் என்ற பெயரிட்டார் இலவாசியே. நெருப்பு எரிவதற்கு காற்றில் உள்ள ஆக்சிசன் தான் காரணம் என இலவாசியே கண்டறிந்தார். ஆக்சிசன், நைதரசன் ஆகிய இரண்டு வாயுக்கள் கலந்தது தான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்சிசனும், ஐதரசனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவினார். ஆனால் இலவாசியே கண்டு சொல்லும்வரை அவை அறியப்படாமல் இருந்தன. புதிதாக கண்டுபிடிக்கப்படும் எதனையும் அறிவியல் உலகம் அவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டதில்லை. இலவாசியேவின் கண்டுடிப்புகளும் அதற்கு விதிவிலக்காக இல்லை. இலவாசியே தனது கண்டுபிடிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும் அப்போது புகழ்பெற்றிருந்த வேதியியலாளர்கள் அவரது கருத்துக்களை ஏற்க மறுத்தனர். ஆனால் தான் உண்மை என்று நம்பியவற்றை எடுத்துக்கூற லவாய்சியர் தயங்கியதில்லை.

 Antoine Lavoisier GIF | Gfycat

1781ல் இலவாசியேவின் மனைவியான மாரி-ஆன் இராபர்ட் பாய்லேயின் ஒரு கட்டுரையை பிரான்சிய மொழிக்குப் பெயர்த்தார். அக்கட்டுரையில் ஒரு சோதனை பற்றிய முடிவுகளை பாய்லே குறித்து வைத்திருந்தார். அதாவது இரும்புத் தகடைச் சூடாக்கும் போது அதன் எடையில் மாற்றம் ஏற்படுவதைக் குறித்திருந்தார். மற்ற அறிவியலாளர்களைப் போலவே பாய்லேயும் அந்த வேதியியல் ஆராய்ச்சியின் போது அதிகப்படியான எடை உருவானதாகக் குறிப்பிட்டிருந்தார். இலவாசியேவுக்கு அதை அப்படியே நம்புவதில் விருப்பமில்லை. சரியான முறையில் அனைத்தையும் அளக்கவில்லை, அதிலும் குறிப்பாக பொருளின் எடையை மட்டுமல்லாது சுற்றுப்புறத்தைப் பற்றியும் துல்லியமாக அளக்க வேண்டும். அவ்வாறு பாய்லே செய்திருக்க மாட்டார் என்று சந்தேகப்பட்டார். அதனைச் சரிபார்க்க, பாய்லேயின் அந்தச் சோதனையைத் தானும் செய்து விட முடிவுசெய்தார்.

 Bob's Beautiful Blue Glacier – Sustainable Nano

முதலில் ஒரு சிறு தகட்டை எடுத்த ஆண்டனி அதை மிகத் துல்லியமாகத் தன் தராசில் வைத்து எடையைக் கண்டுபிடித்துக் குறித்துக் கொண்டார். அதன் பின்னர் அத்தகட்டை வெப்பத்தைத் தாங்கும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு கண்ணாடி குடுவைக்குள் வைத்து அதன் வாயை இறுக அடைத்தார். இப்போது அந்தத் தகட்டோடு சேர்த்துக் குடுவையின் எடையையும் குறித்துக் கொண்டார். இப்போது அந்தக் குடுவையைச் சூடாக்க ஆரம்பித்தார். சூடு அதிகமாகும் போது அவர் உள்ளே வைத்த இரும்புத் தகட்டின் மேல் சாம்பல் நிறத்தில் ஒரு அடுக்கு படியக் கண்டார். அதன் பின்னர் சூடாக்குவதை நிறுத்தி விட்டுக் குடுவையைக் குளிர வைத்தார். மீண்டும் குடுவையை எடை போட்டார். குடுவையின் எடையில் எந்த மாற்றமும் இல்லை இப்போது குடுவையை மெல்லத் திறந்ததும் காற்று வெற்றிடத்தை நிரப்புவதைப் போல் வேகமாக உள்ளே நுழைந்தது. இப்போது தகட்டை மீண்டும் எடுத்து எடையைப் போட்டார் ஆண்டனி. தகட்டின் எடை 2 கிராம் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தார். பாய்லே சொன்னது போலவே தகட்டின் எடை அதிகரித்திருந்தது. 

குடுவையின் மொத்த எடை ஆய்வுக்கு முன்னும் பின்னும் மாறாததால் தகட்டுக்கு அதிகப்படியான எடை குடுவைக்கு உள்ளே இருந்த காற்றினால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஐயப்பட்டார். அதனால் தான் காற்று வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேகமாக நுழைந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். தகடு சூடேறும் போது காற்றுடன் வினைபுரிந்து சாம்பல் நிற அடுக்கு உருவாகி இருக்கின்றது என்று கண்டறிந்தார். இப்போது சற்றுப் பெரிய தகட்டை எடுத்துச் சூடாக்கி அதனை எடை போட்டார். அதே இரண்டு கிராம் தான் அதிகரித்திருந்தது. எத்தனை பெரிய தகடைச் சூடாக்கினாலும் இரண்டு கிராம் மட்டுமே அதிகரித்தது. அதுவே பெரிய குடுவையில் வைத்தால் இன்னும் கொஞ்சம் அதிக எடை அதிகரித்தது. ஆக, குடுவைக்குள் இருக்கும் காற்றின் அளவைப் பொறுத்தே தகடின் எடையில் மாற்றம் உருவாவதைக் கண்டறிந்தார். அதிலும், குடுவைக்குள் இருக்கும் காற்று அதிகரிக்க அதிகரிக்க, அதிகமான எடை அளவில் 20 சதவீதம் மட்டுமே தகட்டுடன் வினைபுரிந்து அதன் எடை அதிகரிக்க வகை செய்தது. சுற்றுப்புறக் காற்றில் 20 சதவீதக் காற்று மட்டுமே தகட்டை வினைபுரியச் செய்ய வைக்க வல்லது என்று கண்டறிந்தார். இந்த 20 சதவீதக் காற்று தான் 1774ல் பிரீசிட்லி கண்டறிந்த சுத்தக் காற்று என்று உணர்ந்து கொண்ட லவாய்சியர். அதற்கு ஆக்சிசன் என்று பெயரிட்டு அழைத்தார். 

அத்தோடு அதை ஆண்டனி விடவில்லை. மேலும் பல ஆராய்ச்சிகளைச் செய்தார். பல்வேறு வேதி வினைகளின் போது நிகழ்வதை அளந்து பார்த்து மிக முக்கியமான ஒன்றைக் கண்டறிந்தார். மொத்தமாகப் பொருளின் நிறை எப்போதும் அழிவதில்லை. அதை யாரும் அழிக்க முடியாது வேதி வினைகளின் போது பொருளின் நிறையானது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லலாம், அல்லது ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்குச் செல்லலாம். ஆனால் மொத்த நிறை எப்போதும் மாறுவதில்லை என்று உலகுக்கு வெளிக்காட்டினார். எந்த ஓர் ஆராய்ச்சியின் போதும் நிறை எங்கே சென்றது என்பதையும் குறித்து வைத்திருத்தல் அவசியம் என்றும் வலியுறுத்தினார். தான் கண்டறிந்த இம்முடிவுகளை 1789ல் அவர் வேதியியல் புத்தகத்தில் வெளியிடும் வரை இரகசியமாகவே வைத்திருந்தார். 

1789ம் ஆண்டில் இலவாசியே Elements of Chemistry என்ற மிகச்சிறந்த பாட நூலை எழுதி வெளியிட்டார். தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அந்த பாட நூலில் ஆதாரங்களுடன் விளக்கினார். அதனை படித்த இளைய வேதியியலாளர் இலவாசியேவின் கருத்துக்களை ஏற்க தொடங்கினர். தனிமங்கள் என்று தான் கருதிய பொருட்களின் பட்டியலையும் அந்த பாட நூலில் இணைத்திருந்தார். ஒருசில தவறுகள் நீங்கலாக இலவாசியே கண்டு சொன்ன பெரும்பாலான வேதிப்பொருட்கள் இன்றைய தற்கால வேதியியலின் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. லவாய்சியர் அடுத்து வேதியியலுக்கான கலைச்சொல் தொகுதியை நன்கு திட்டமிட்டு உருவாக்கினார். அவர் உருவாக்கி தந்த அந்த கலைச்சொல் தொகுதிதான் வேதியலுக்கு ஓர் ஒருங்கிணைந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 

உலகம் முழுவதிலும் உள்ள வேதியியலாளர்கள் ஒரே மாதிரியான கலைச்சொற்களை பயன்படுத்த தொடங்கினார்கள். அதனால் அவர்களால் தங்களது கண்டுபிடிப்புகளை ஒருவொருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடிந்தது. வேதியியல் துறையும் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மற்ற துறைகளிலும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார் இலவாசியே. உடலியலில் அவர் ஒரு நுட்பமான உண்மையை கண்டுபிடித்துச் சொன்னார். நாம் மூச்சு விடும் செயல் மெதுவாக எரியும் செயலுக்கு சமமானது என்பதுதான் அந்த உண்மை. மனிதனும் விலங்குகளும் தாங்கள் சுவாசிக்கும் பிராண வாயுவைக் கொண்டு உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று இலவாசியேகண்டறிந்து கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த அந்த கண்டுபிடிப்பு உடலில் இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்த வில்லியம் ஹார்வியின் கண்டுபிடிப்புக்கு சமமானது என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.

 

பிரான்ஸ் முழுவதும் எடை மற்றும் அளவுகளை கணக்கிடும் முறையை ஒருங்கிணைக்கும் பணிக்குழு அமைக்கப்பட்டபோது அதில் இலவாசியே முக்கிய உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். அந்த பணிக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில்தான் பிரான்ஸில் மெட்ரிக் அளவுமுறை நடப்பில் வந்தது. சுமார் இருபது ஆண்டுகள் அரசாங்கத்துறையில் விஞ்ஞானியாக பணியாற்றினார் லவாய்சியர். பொதுச்சேவையிலும் ஈடுபட்டார். பிரெஞ்சு ராயல் அறிவியல் கழகத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார். பர்ம் ஜெனரல் என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பாளாராகப் பணியாற்றியதுபோது அந்த அமைப்பின் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டார். 1794ம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி நடப்பிலிருந்த காலகட்டம். அப்போது பிரான்சின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த புரட்சி அரசாங்கம் பர்ம் ஜெனரல் அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கியது. மொத்தம் 28 பேரை கைது செய்தது. முந்தைய அரசாங்கத்தோடு அரசியல் தொடர்புடையவர்கள் என்பதும், புரட்சிக்கு எதிரானவர்கள் என்பதும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. 

ஒரே நாளில் அதாவது 1794 ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி அந்த 28 பேரும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என தீர்ப்பளித்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதே தினம் அந்த 28 பேரின் தலையும் கிளெட்டின் எனப்படும் வெட்டுக் கருவியால் துண்டிக்கப்பட்டது. உலகில் புரட்சி நிகழ்ந்தபோதெல்லாம் இதுபோன்ற அநியாயமான மரணங்களை வரலாறு சந்தித்திருக்கிறது. ஆனால் அன்றைய தினம் நிகழ்ந்த அந்தச் சம்பவம் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. காரணம் கொல்லப்பட்ட அந்த 28 பேரில் உலகம் இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரிய அறிவியல் மேதைகளில் ஒருவரான இலவாசியேவும் இருந்தார். இலவாசியே நாட்டிற்கும், அறிவியலுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பங்கை எடுத்துக்கூறி அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது நீதிபதி, இந்த நாட்டிற்கு மேதைகள், விஞ்ஞானிகள் தேவையில்லை என்று கூறி மரண தண்டனையை உறுதி செய்தார்.

Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி. 




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

சென்னை பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மின்னணுவியல் கண்காட்சி பார்வையிட்ட நேரு நினைவு கல...