Thursday, April 14, 2022

வெற்றிகரமாக ஆய்வு மாணவி சாதனை சந்தியா சியாமளா-ஆழமாகப் படிக்கவேண்டும்.

வெற்றிகரமாக ஆய்வு மாணவி  சாதனை சந்தியா சியாமளா-ஆழமாகப் படிக்கவேண்டும்.

பேராசிரியர் சி.சுதாகர்.



கடந்த 14 ஆண்டுகளாக மண்புழுவை மையமாகவைத்தே என் ஆய்வகம் செயல்பட்டுவருகிறது. இந்த காலத்தில் சுமார் அறுபது ஆராய்ச்சி மாணவர்களை இந்த ஆய்வகம் சந்தித்துள்ளது. நான் பார்த்தவரை சில மாணவர்கள் படிப்பில் கில்லாடியாக இருப்பார்கள். அதனால் அவர்களால் புதுப்புது சிந்தனைகளைச் சல்லடை போட்டுச் சலித்தெடுக்கும் வித்தகராக இருப்பார்கள். சிலர் ஆய்வக செய்முறைகளில் சிறந்து விளங்குவார்கள். சிலர் தான் கண்டுபிடித்ததை மட்டும் இல்லை எதை வேண்டுமானாலும் திறம்படப் பேசும் வல்லமை படைத்தவர்களாக இருப்பார்கள். சிலர் தான் கண்டறிந்ததை நேர்த்தியாக எழுதுவதில் கைதேர்ந்தவர்களாக இருப்பார்கள். வெகுசிலர் மேற்கண்ட அனைத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள். இந்தவகையைச் சார்ந்தவர்கள் திறமையின் அடிப்படையில் பல பேராசிரியர்களுக்கும் மேலானவர்கள்.

என் ஆய்வகம் சந்தித்த ஆராய்ச்சி மாணவ மாணவிகளில் சந்தியாவும் ஒருத்தி. இவளின் முழுப் பெயர் சந்தியா சியாமளா ஆகும். கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள எல்லையில் பிறந்த பெண். அப்பா மறைய அம்மா அரவணைப்பில் மற்றும் ஆதரவில் படிக்கும் குடும்பத்தின் மூத்தப் பெண். குடும்ப பொறுப்பை அவ்வப்போது சுமக்கும் பொறுப்புள்ள பெண்.
என் ஆய்வகத்தில் ஆராய்ச்சி மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்குச் செய்முறை மற்றும் இவர்களுக்கு ஆராய்ச்சி பயிற்சி அளிக்க எனக்கு உதவி செய்வார்கள். சில நேரங்களில் ஆராய்ச்சி மாணவர்கள் பலர் மாணவர்களிடம் கோபப்பட்டுப் பார்த்திருக்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் நான் சந்தியா கோபப்பட்டுப் பார்த்ததில்லை. அமைதியான பெண்.

சந்தியாவின் ஆராய்ச்சி மண்புழுவின் இதயம், இரத்த ஓட்ட நாளங்கள் மற்றும் இவற்றின் மறு உருவாக்கம் (regeneration) பற்றியது. மண்புழு சுமார் 20 சென்டிமீட்டர் நீளம் இருக்கும். ஆனால் இதன் தடிமன் சுமார் 5 மில்லிமீட்டர்தான் இருக்கும். இந்த நிலையில் மண்புழுவின் இதயம் ஒரு சில மில்லிமீட்டர்தான் இருக்கும். இதயமே சில மில்லிமீட்டர்தான் என்ற நிலையில் மண்புழுவின் இரத்த நாளங்கள் ஒரு மில்லிமீட்டருக்கும் குறைவான தடிமனிலேயே இருக்கும். சந்தியாவுக்கு மண்புழுவின் இரத்த நாளங்கள் மற்றும் இதயத்தை ஆழமாகப் படிக்கவேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. இவைகளைப் பற்றி உலகிற்கு அதிகம் தெரியாது. எனவே சந்தியாவின் ஆசையும் அர்த்தமுள்ளதுதான்.


ஆரம்பத்தில் நான் அவளுக்காக வேறு ஆராய்ச்சி திட்டத்தை வைத்திருந்தேன். சந்தியா அவள் சொந்த விருப்பில் ஆராய்ச்சி செய்ய விரும்பவே நானும் அவள் விருப்பத்திற்குத் தடை போடவில்லை. இதற்குக் காரணம் ஒரு நாள் மண்புழுவின் இரத்த நாளங்களைப் படமெடுத்து என்னிடம் காட்டினாள். நான் இந்த படத்தை எப்படி எடுத்தாய் எனக் கேட்க, அவள் மண்புழுவின் இரத்தத்தில் ஒரு வித சாயப் பொருளை ஏற்றியதாகவும்; அந்த சாயப்பொருள் மண்புழு உடலெங்கும் பரவியபின், நுண்ணோக்கி துணையுடன் படமெடுத்ததாகவும் கூறினாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் மண்புழுவின் இரத்த ஓட்டத்தில் சாயப் பொருளைச் செலுத்த 200 நானோ மீட்டர் தடிமனுக்கும் குறைவான ஊசி வேண்டும். இந்த வகை ஊசி கொண்ட கருவியை மைக்ரோ இஞ்சக்டர் (Micro-injector) என அழைப்பார்கள். இந்த கருவி சுமார் பத்து லட்சம் ரூபாய் இருக்கும். இந்த கருவி என் ஆய்வகத்தில் இல்லை. அதனால்தான் சந்தியா எப்படி அவ்வளவு சிறிய மண்புழுவின் இரத்த நாளத்தில் சாயப் பொருளை ஏற்றினாள் என ஆச்சரியப்பட்டு அவளிடம் கேட்டேன்.


அவள் சிரித்தவாறே நீங்கதான் சொல்லிக் கொடுத்தீர்கள் என்றாள்.
நானா?
எப்போது எனக் கேட்டேன். Capillary tube பை தீயில் வைத்து இழுத்தால் சில நானா மீட்டர் தடிமன் கொண்ட ஊசி தயாரிக்கலாம் என நீங்கள் தான் கூறினீர்கள் என்றாள். உண்மைதான் கூறினேன். ஆனால் மைக்ரோ இஞ்சக்டர் இல்லையே எனக் கேட்டேன்.
அவள் தயாரித்த ஊசியை மைக்ரோ பைப்பட்டில் (micropipette) இணைத்து மண்புழு உடலில் செலுத்தியதாகக் கூறினாள்.
நான் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்றேன். அவள் தேவைக்கு அவளாக உருவாக்கிக்கொண்ட உபகரணங்களில் இதுவும் ஒன்று. சந்தியா பிறப்பிலேயே கண்டுபிடிப்புக் கலை உடலில் ஏறிய பெண் எனலாம்.
சந்தியா உருவாக்கிய அடுத்த கருவி ஒன்றை விளக்குகிறேன். இந்த பெண்ணின் திறமை என்னவென்று உங்களுக்குப் புரியும்.
இது என்ன புதுசாயிருக்கிறதே என ஆய்வகத்திலிருந்த ஒரு கருவியைப் பார்த்து சந்தியாவிடம் கேட்டேன். சந்தியா இது மண்புழு ஆராய்ச்சிக்காக நானே செய்தது என்றாள். இந்த கருவியைச் செய்ய ஒரு மீன் தொட்டியை வாங்கியிருக்கிறாள். அதற்கு ஒரு கண்ணாடி மூடியும் செய்திருக்கிறாள். அந்த மூடியின் மத்தியில் ஒரு வட்டவடிவ ஓட்டை ஒன்றை உருவாக்கியிருக்கிறாள். அந்த ஓட்டையில் ஒரு பெரிய லென்ஸ்சை இணைத்துள்ளாள். அந்த மீன் தொட்டியுள் மற்றும் அந்த லென்ஸ்க்கு அடியில் ஒரு மண்புழுவை வைக்கிறாள். இப்போது சந்தியாவால் மண்புழுவைப் பல மடங்கு பெரிதாகப் பார்க்க முடிகிறது. இதனில் தொட்டியின் உயரம் முக்கியமானதாகும். காரணம் லொன்ஸ் வழியாக எந்தப் பொருளைப் பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட தொலைவில்தான் பொருள் தெளிவாகத் தெரியும். இதனை அறிந்து தொட்டியின் உயரத்தை நிர்ணயித்துள்ளாள். இந்த கருவி சந்தியாவின் ஆராய்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த கருவி மற்றும் அதன் கட்டமைப்பு சந்தியாவின் மூளையில் உதித்த புது யோசனை. இதனைக் கட்டமைக்கச் சந்தியா என்னிடம் பண உதவிக்கு வரவில்லை. அவள் கைப்பணச் செலவில்தான். இதனை வடிவமைத்துள்ளாள். அவளுக்கு அரசோ அல்லது பல்கலைக்கழகமோ ஆராய்ச்சி மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை எதுவும் கிடைக்கவில்லை. சந்தியா பணக்கார வீட்டுப் பெண்ணும் இல்லை. இருந்தும் கண்டுபிடிப்பு மேல் உள்ள ஆவலில் கைப்பணத்தைச் செலவு செய்து இந்த கருவியை உருவாக்கியுள்ளாள்.
சந்தியா வெற்றிகரமாக தன் ஆய்வுப் பணியை முடித்துவிட்டாள். இப்போது ஆராய்ச்சி கட்டுரை மற்றும் ஆய்வறிக்கையைத் தயார் செய்து கொண்டிருக்கிறாள். விரைவில் டாக்டர் பட்டம் பெறுவாள். PhD பட்டம் வாங்கிய பின் சந்தியாவுக்கு நல்ல ஆய்வுப் பணியில் சேர வாய்ப்பு கிடைக்கும் என நான் திடமாக நம்புகிறேன்.
நன்றி: பேராசிரியர் சி சுதாகர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...