Sunday, February 21, 2021

தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது- உலக தாய்மொழி தினம் இன்று (பிப்ரவரி 21)

தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை; தொடர்ச்சியில் இருக்கிறது- உலக தாய்மொழி தினம் இன்று (பிப்ரவரி 21)

உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், பல்வேறு மொழிகள் பேசும்  மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கவும். ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி இனம் கடைபிடிக்கப்படுகிறது. 1952-ல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகிறதான தலைநகர் டாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக ஆக்க கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்த்த மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படுகிறது. ஒருவர் பல மொழிகளை தெரிந்து கொள்ளவும், கற்றும் கொள்ளவும், மொழிபெயர்ப்பு மூலம் எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து அமைதியை உருவாக்கவும் இத்தினம் வலியுறுத்துகிறது. காந்திஜியும் சுயசரிதையான சத்திய சோதனையை முதலில் தம் தாய் மொழியிலேயே எழுதினார் என்பதும் தாய்மொழிக்கான சிறப்பாகும். நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மிகவும் தொன்மையானதும், இனிமையானதும் ஆகும்.

தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை. தொடர்ச்சியில் இருக்கிறது. குவாரணி மொழி அழிந்து விட்டால் இந்த உலகம் அழிய கூடாது என்று யார் இறைவனிடம் வேண்டுவார்கள்",  என்ற குவாரணி பழமொழி ஒன்று உள்ளது. ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. தாய் மொழியைக் கற்றுக் கொள்வது ஓர் இயல்பான, எளிமையான செயல். தாய் மொழியினைக் கற்றுக் கொள்ளாமல் ஓர் அயல் மொழியினையோ, குடியேற்ற மொழிகளையோ கற்றுக் கொள்ள முயற்சிகள் தேவை. ஒவ்வொரு மொழிக்கும் சில தனித்தன்மைகள் உண்டு, அது அனைத்தையும் பிற மொழிகளில் மொழி பெயர்த்துவிட முடியாது. உதாரணமாக, தமிழில் 'மனம் குளிர வரவேற்கிறோம்' என்ற சொற்றொடரை ஆங்கிலத்தில் 'Warm Welcome' என்று மொழிபெயர்க்கும்போது அதன் பொருளே மாறுபட்டு விடும். எழுத்தறிவிற்கு தாய்மொழிக்கல்வி மிக அவசியம். ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற ஓர் ஆய்வில், பிறமொழிக் கல்வியினை கற்றவர்களைவிட, தாய்மொழிக் கல்வியினைக் கற்றவர்களுக்கு 40 சதவீதம் எழுத்தறிவுத்திறன் அதிகமாக இருக்கின்றது என்பது உறுதியாகி இருக்கின்றது.

அமெரிக்காவில் பர்க்கெலி கலிபோர்னியா பல்கலையின் தமிழ்ப்பீடப் பேராசிரியராக இருந்த ஜார்ஜ் ஹார்ட், இந்தியாவில் இருந்து ஆங்கில வழிகல்வி அல்லது பிற மொழி கல்வியினை மட்டும் கற்றுக் கொண்டு அமெரிக்கா வருகிறவர்களால் ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் போல புலமையுடன் இருக்க முடிவதில்லை. அவர்கள் தாய்மொழிக் கல்வியினை புறக்கணித்ததால் அவர்களின் தாய்மொழியிலும் புலமை பெற்றவர்களாக இல்லை. அவர்களால் எந்த மொழியிலும் துல்லியமான சொற்களைக் கொண்டு தங்களுடைய கருத்துகளை ஆழமாக சொல்ல முடிவதில்லை என்று கூறியதாக மணி மணிவண்ணன் தெரிவித்தார். இது நமக்கு பேரிழப்பு. இலக்கியமாகட்டும், அன்றாட வாழ்வியலாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும், அறிவியலாக இருக்கட்டும், துல்லியமாக பேச, எழுத, கேட்டு புரிந்துகொள்ள திறமை உடையவர்களாக இருத்தல் அவசியம்.

தமிழ் மொழியின் சிறப்பு பற்றி கூற வேண்டுமெனில் ஈழத்து தமிழறிஞர் கா.சிவத்தம்பி, "தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது," என்பார். ஆகவே, தமிழ் மொழியின் மேன்மை அதன் தொன்மையிலும், தொடர்ச்சியிலும் இருக்கின்றது. இரண்டாயிரம் ஆண்டு மரபுடையது நம் மொழி, இந்த மரபு உலகத்தில் வெகு சில மொழிகளுக்கு மட்டும்தான் உண்டு. கிரேக்க மொழிக்கு இந்த சிறப்பு உண்டு, ஆனால் தொன்மையான கிரேக்க மொழியின் இலக்கியத்தை இன்றைக்கு அவர்களால் எளிதாக கற்றுக் கொள்ளவோ, புரிந்து கொள்ளவோ முடியாது. நமக்கோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியமான திருக்குறளை பள்ளியில் கற்றுத் தருகின்றனர். திருக்குறளில் உள்ள சொற்கள் பல, நம்முடைய இன்றைய வாழும் மொழியிலும் இருக்கின்றது. இந்த அளவிற்கு தொடர்ச்சியான மரபுடைய மொழிகள் உலகத்தில் இல்லவே இல்லை என்று சொல்லலாம்.

சீன மொழியான மாண்டரின், அரபு மொழி என தொன்மையான மொழிகள் எதனை எடுத்துக் கொண்டாலும் அதனுடைய தொடர்ச்சி அறுந்து போயிருக்கின்றது. வடமொழியினை எடுத்துக் கொண்டால் அது வாழும் மொழியாக இல்லை. எபிரேய மொழியினை புதுப்பித்துக் கொண்டு இருக்கின்றார்கள், அதன் தொன்மையை மீண்டும் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். நடுவில் அது தன் மரபுத் தொடர்ச்சியினை இழந்து இருந்தது. ஆனால் தமிழில் அறுபடாத தொடர்ச்சி இருக்கின்றது. குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், இடையில் குறைந்தது 500 - 600 ஆண்டுகள் நாம் அயலார் ஆதிக்கத்தில்தான் வாழ்ந்து இருக்கின்றோம். அப்படி இருந்த போதிலும், நம்முடைய மொழி எந்த விதமான அரசின் துணையும் இல்லாமல் மக்களால் மட்டுமே தொடர்ச்சியாக உயிர்ப்புத்தன்மையுடன் கொண்டுவரப்பட்டுள்ளது. திருக்குறளோ, சங்க இலக்கியங்களோ எதுவாயினும் ஒவ்வொரு தலைமுறையும், அடுத்த தலைமுறைக்கு இந்த இலக்கியங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வோடு செயல்பட்டு இருக்கின்றனர்.

Image result for தாய்மொழி  gif

அப்படிப்பட்ட மரபை, நாம் ஒரு தலைமுறையில் தொலைத்து விடலாம். ஆனால் நாம் புதியதாக கற்றுக் கொள்ளும் மொழி நம்முடைய தாய்மொழியாக மாறப்போவதில்லை. எப்பொழுதும் குடியேற்ற மொழிகள் அயல் மொழிகளாகத்தான் இருக்கும். தமிழ் நவீன காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்கின்றது. தற்கால தொழில் நுட்பங்கள் வளரத் தொடங்கிய காலத்தில், தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு வடிவமைத்து தமிழை புழங்கத் தொடங்கியவர்கள் தமிழர்கள். உலகமெங்கும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள், தமிழகத்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்களுடைய தனித்தன்மையில் இந்த நுட்பத்தை எடுத்து சென்றோம், பின்பு அரசும் அதன் தேவையை உணர்ந்து அதில் ஈடுபட்டது. எந்த தொழில் நுட்பம் எடுத்துக் கொண்டாலும் ஏதாவது ஒரு தமிழர் அதில் தமிழை பயன்படுத்தும் வகையில் வடிவமைத்து வைத்திருப்பர். பெரியதாக அரசு, அதிகார உதவியில்லாமலேயே தமிழ் மொழி, தமிழர்களால் வளர்ந்து வந்திருக்கின்றது என்கிறார் மணி மணிவண்ணன்.

ஓய்வு பெற்ற இந்திய ஆட்சித் துறை அதிகாரி பாலகிருஷ்ணன், ஒவ்வொரு தாயைப் போலவே ஒவ்வொரு தாய்மொழியும் சிறந்தது. உலகத்தில் இப்பொழுது கிட்டத்தட்ட 7,000 தாய்மொழிகள் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான தாய்மொழிகள் பேசப்படுகின்றன. பழங்குடி மக்களின் மொழிகள் இந்தியாவின் பல பகுதிகளிலும், உலகின் பல பகுதிகளிலும் பேசப்படுகின்றன. இந்த மொழி ஒற்றுமையையும், பன்மையத்தையும் புரிந்து கொள்வது அடிப்படையான தேவையாக இருக்கின்றது. இந்த நாகரிக புரிதல் தமிழர்களை பொறுத்தவரை பன்னெடுங்காலமாக இருந்து வந்திருக்கின்றது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புரிதல் இப்படிப்பட்ட அடிப்படையிலான பண்பில் இருந்துதான் வளர்ந்திருக்க முடியும். சங்க இலக்கியங்களில் ஒன்றான பட்டினப்பாலையில் "மொழி பெயர் தேயத்து புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உரையின் முட்டாச் சிறப்பின் பட்டினம்" என்ற வரிகள் வரும். இது ஒரு மிகசிறந்த பன்மையம் பற்றிய புரிதலுக்கான ஒரு அடையாளம் ஆகும். இந்த நாளில் நமது மொழியை நேசிக்கவும், பிற மொழி பேசும் மக்களை மதிக்கவும் கற்றுக்கொள்ள அனைவரும் உறுதியெடுக்க வேண்டும் என்றார்.


இந்தியாவின் அடையாளத்தை பன்முகத்தன்மையால்தான் வளர்த்தெடுக்க முடியுமே தவிர, ஒற்றை அடையாளத்தால் வளர்த்தெடுக்க முடியாது. இதைத்தான் உலகமும் புரிந்து கொள்ள வேண்டும். மொழி பண்பாட்டினுடைய மிகப்பெரும் கருவூலம். உலகில் அடையாளம் காணப்பட்டுள்ள 6000 மொழிகளில் ஏறக்குறைய 43 சதவீத மொழிகள் அருகிவரும் நிலையில் உள்ளன. இதில் சில நூறு மொழிகள் மட்டுமே கல்வித்துறையிலும், அரசுத்துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 100க்கும் குறைவான மொழிகள்தான் தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்படுகின்றன. உலக மயமாக்கலால் தாய்மொழிகள் வேகமாக அருகி வருகின்றன. மனிதர்கள் தங்களது பாரம்பரிய அறிவினையும், பண்பாட்டினையினையும் நிலைநிறுத்திக் கொள்ள தங்களது தாய்மொழியினைக் காத்துக் கொள்வது அவசியம் என ஐ.நா வலைப்பக்கத்தில் தாய்மொழி தின செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

Source By: Wikipedia and BBC Tamil.

தகவல்: முனைவர் P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.





No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...