Saturday, June 5, 2021

12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: முதல்வர்.

 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: முதல்வர்.

மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கான பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. இதனை உச்ச நீதிமன்றமும் வரவேற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவது குறித்த பெரும் விவாதம் எழுந்தது. தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின் கீழ் படிக்கும் 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்தது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்டது. அதைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள், சட்டமன்ற பிரதிநிதிகளுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனையில் நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு தேர்வு குறித்து மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்களுடனும் ஆலோசிக்கப்பட்டு, அனைத்து தரப்பினர் தெரிவித்த கருத்துக்கள் முதல்வரிடம் அளிக்கப்பட்டது. அதன், அடிப்படையில் முதலமைச்சர் உரிய முடிவை அறிவிப்பார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய பள்ளிக்கல்வித்துறைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும்.

இந்த குழு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்கும். தொடர்ந்து, உயர்கல்வி நிறுவனங்களில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும்.




இது போன்ற தகவல் பெற

மேலும் படிக்க 



No comments:

Post a Comment

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு தொடக்க விழா.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு தொடக்க விழா. 3- 7 -2024 புதன்கிழமை புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் ப...