நேரு நினைவு கல்லூரியில் முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி.
புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறையில் “முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண்மை” தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி 28.09.2022 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் இளங்கலை வேதியியல் மற்றும் இளங்கலை விலங்கியல் துறை சார்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கல்லூரியின் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் வேதியியல் பேராசிரியர் முனைவர் திரு. எம். ரமேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பின் கல்லூரியின் தலைவர், செயலர் மற்றும் முதல்வர் அவர்கள் இணைந்து சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். கல்லூரியின் முதல்வர் முனைவர். ஏ.ஆர்.பொன் பெரியசாமி அவர்கள் முன்பொரு காலத்தில் புத்தனாம்பட்டியில் வெள்ளம் வந்த வரலாற்றினையும், அதுபோன்ற வெள்ளம் வரும் காலங்களிலும் தீ போன்ற பேராபத்து ஏற்படும் காலங்களிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றியும் தலைமை உரையாற்றினார்.
கல்லூரியின் செயலர் திரு பொன் ரவிச்சந்திரன் அவர்கள் முதலுதவியின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்களை பற்றியும் கூறினார். மாணவர்கள் இந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுரை கூறினார். பெருமாள் மலை ரோட்டரி சங்கம் தலைவர் திரு. ஞானசேகரன் அவர்கள் வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களையும் கல்லூரியின் தலைவர், செயலர், முதல்வர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் சார்பாக வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர் திரு. சிவராமலிங்கம் அவர்கள் முதலுதவியின் தேவைகளையும் முக்கியத்துவத்தையும் பற்றி கூறினார். முதலுதவி செய்யும் போது D R A B C (D -DANGER, R- RESPONSE, A -AIR WAY, B- BREATHING, C- CIRCULATION OF BLOOD) யை நினைவில் கொள்ளவும் வேண்டினார். மாரடைப்பு ஏற்படும் மனிதருக்கு முதலில் CPR (Cardio Pulmonary Resuscitation) கொடுக்க வேண்டும் என்றும் அந்த மயக்கமுற்ற மனிதரை எவ்வாறு படுக்க வைக்க வேண்டும் என்பதையும் பற்றி காணொளி மூலமாகவும், மாரடைப்பிற்கான காரணங்களையும் அதற்கான அறிகுறிகள் பற்றியும் மாணவர்களுக்கு தெரிய வைத்தார். வருமுன் காப்பதன் நடவடிக்கைகளை பற்றியும் அதற்கான மூல காரணங்களை பற்றியும் அதற்காக செய்யவேண்டிய உடற்பயிற்சிகளை பற்றியும் விளக்கினார் .
தீக்காயம், எலும்பு முறிவு, விஷத்தாகம், வலிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட்டிருக்கும் நிலையில் முதலுதவியில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பற்றி விளக்கினார். அதன் பிறகு சிறப்பு விருந்தினர் திரு. குணசேகரன் அவர்கள் மாணவர்களை புத்துணர்வூட்டும் விதமாக குழுக்களாக பிரித்து ஒரு குழுவிற்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு அதனைப் பற்றி கேள்விகள் கேட்டார். அந்த தலைப்புகள் பேரிடர்கள் தொடர்பாக கொடுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக சுனாமி நிலச்சிதைவு சூறாவளி போன்றவை. மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உற்சாகத்துடன் பதில் அளித்தனர். பின் நிகழ்ச்சியின் நோக்கமான முதலுதவி செய்யும் விதத்தினை தன்னார்வலர் மாணவரின் உதவியுடன் செய்முறையாக மாணவர்களுக்கு செய்து காட்டினார். மயக்கம் மாரடைப்பு விபத்து போன்ற பேராபத்து இருக்கும் மனிதர்கள் மீட்கும் விதம் மற்றும் முதலுதவி செய்யும் விதங்களை செய்து காட்டினார். மாணவர்கள் தானே முன்வந்து அவர் செய்த செய்முறைகளை செய்து காட்டினார். பின் மாணவர்கள் அவர்களின் சந்தேகங்களை சிறப்பு விருந்தினர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர். இறுதியாக இளங்களை வேதியல் மூன்றாம் ஆண்டு மாணவி ஆர்.ஜானகி நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சி நண்பர்கள் 1.30 மணி அளவில் நாட்டுப்பண்ணுடன் நிறைவடைந்தது.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.