ஆதியும் அந்தமும்.. பிரபஞ்சத்தின் வரலாறு- நூல் மதிப்புரை..(பேரா.சோ.மோகனா).
புத்தகத்தின் பெயர்: ஆதியும் அந்தமும்.
புத்தகத்தின் விலை:ரூ 230/=
பக்கம் :200
வெளியீடு : விஞ்ஞான் பிரச்சார்
நான் ஆதியும் அந்தமும் படித்ததே ஒரு தனி ரகம்தான். முதலில் புத்தகத்தை வாங்கி பாதி படித்து வீட்டில் வைத்துவிட்டேன். யாரோ எடுத்துச் சென்று விட்டனர். இரண்டாவது புத்தகம் வாங்கினேன். எனது நண்பர் முனைவர் சாவித்திரியிடம் கொடுத்து, அவரைப் படித்து பதிவிடச் சொல்லி கொடுத்துவிட்டேன். அவரும் படித்து முடித்துவிட்டார். இப்போது என் கையில் இருப்பது மூன்றாவது முறை வாங்கிய புத்தகம். இது எப்படி இருக்கு ?
ஆதியும் அந்தமும் புத்தகத்தை எழுதிய முனைவர் சசிகுமாரின் அறிமுகம் எனது புத்தகங்களை அவர் அறிமுகம் செய்தது மூலம்தான் கிட்டியது. அவர் இந்திய அரசின் ISRO வில் பணிபுரியும் ஒரு விஞ்ஞானி. அவரை,11.12.22 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த மாநில தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில்தான் முதன் முதல் சந்தித்தேன்.
ஆதியும் அந்தமும் புத்தகம் சுவை குன்றாதது. பிரபஞசத்தின் வரலாற்றை ஒரு கதை போல கொண்டு போகிறார் ஆசிரியர் சசிகுமார். . நண்பர்களே குழந்தைகளே பயப்படவேண்டாம். ஏதோ பிரபஞசம் என்றதும் பெரிய பெரிய புரியாத விஷயங்களை சொல்லி பயமுறுத்தப் போகிறார் என்று அஞச வேண்டாம். அற்புதமான பிரபஞசத்தின் வரலாற்றை ஒரு கதைபோல மிகவும் சுவாரஸ்யமாகவே சொல்லி இருக்கிறார். படிப்பவர்களை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போய் ஒவ்வொரு இடமாக பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த விஞ்ஞானிகள் முதல், பிரபஞச எல்லை வரை எல்லாவற்றையும், நம்மிடம் நேரில் அறிமுகம் செய்கிறார். எப்படி என்கிறீர்களா? நம்மை ஒரு கால எந்திரத்தில் வைத்து அழைத்துப் போகிறார். என்ன டுமீல் விடுகிறேன் என்கிறீர்களா..உண்மைதான் நண்பர்களே.
இந்த புத்தகத்தின் கதை நம் பூமி சுற்றுவதிலிருந்து துவங்குகிறது. நொடிக்கு 454 மீட்டர் வேகத்தில் சுற்றும் பூமியிலிருந்து ஒரு பொருளும் கீழே விழாமல் அது பாட்டுக்கு இருக்கிறதே அது எப்படி என்ற கௌதமின் வினாதான் இந்த புத்தகத்துக்கு மைய ஆதாரம் என்றும் கூட சொல்லலாம். ஆனால் துவக்கம் படு இன்டரஸ்டிங். ஆசிரியர் சசிகுமார் சிக்கலான வானவியல் தகவல்களை சர்வ சாதாரணமாக, அனாயசமாக, அவரது கற்பனை சிறகின் மூலம் விரித்து, பறக்க வைத்து , நம்மையும் பறக்க வைத்து அசாதாரணமாகவே கையாண்டு இருக்கிறார்.
புத்தகத்தின் துவக்கம்
கௌதம் நேரலையில் நடந்த உலக வினா-விடைப் போட்டியில் கலந்து கொண்டு, இறுதிச் சுற்றில் கௌதம் வெற்றி பெறுகிறார். அதற்கு அவருக்கு கிடைத்த பரிசுதான் காலத்தை வெல்லும் கால எந்திரம். அதில் அவர் அமர்ந்து எங்கு வேண்டுமானாலும் போகலாமாம். இந்த பூமியில் மட்டுமல்ல, இந்த பேரண்டத்தில் எந்த இடத்துக்கும் கௌதம் போகலாம், அது மட்டுமல்ல, அதில் அமர்ந்தால் கௌதம் விருப்பப் படி, காலத்தை முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ கொண்டு செல்ல முடியும். அங்கு நடக்கும் விஷயங்களை அவர் பார்க்கலாம்; கேட்கலாம், அவர்களுடன் அவர் உரையாட முடியும்,. உதாரணமாக, அப்போது கௌதமின் வயது 14, அவர் விருப்பப்படி அவரின் 4 வயதில் அவர் எப்படி இருந்தார், என்னென்ன செய்தார் என்பதை எல்லாம் கால எந்திரம் அவருக்குக் காண்பித்தது. ஆச்சரியமாக இல்லையா? அது மட்டுமில்லை அவரது எண்ணப்படி, அவர் 100 ஆண்டுகளுக்கு முன்னர் செல்லவும் என்றதும் கால எந்திரம், கைபேசி இல்லாத காலத்தைக் காட்டி அப்போது நடந்த வற்றை தெரிவித்தது. எல்லாமே வியப்புதான். எனக்கும்தான் ரொம்பவே புத்தகம் சுவாரசியமாக இருந்தது. இதெல்லாம் கௌதம் தனியாகப் போய்ப்பார்த்துவந்து அப்பாவிடம் சொல்லியபோது அப்பா நம்பவில்லை. பின்னர் கால எந்திரத்தில் அப்பாவுடன் ஏறிப்போய், நிலவின் அப்பல்லோ தரை இறங்கிய இடம் பார்த்த பின்னர் அப்பாவும் நம்பினார். அதனை, அப்பல்லோ தரை இறங்குவதை அவர்கள் நேரில் பார்த்தனர். அவர்களுக்கோ ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. நமக்கும் தான்.
அந்த கால எந்திரத்தில் தான் நீங்களும் கௌதம், அவரின் அப்பா, அவரது அத்தை பெண் நேத்ரா எல்லோரும் இணைந்து பயணித்து அவர்கள் கண்டதை, அனுபவித்ததை, பார்த்து வியந்ததை நீங்களும் உடனிருந்து காணப்போகிறீர்கள். போகலாமா.. கால எந்திரத்தில் கௌதம் அவரின் அத்தை பெண் வீட்டிற்கு -500 கி.மீ தூரம்- ஒரு நொடியில் போனார்கள், எல்லோரும் உடனே கி.மு 350 க்கு கிரேக்க நாட்டிற்குப் போய் அரிஸ்ட்டாட்டிலைப் பார்க்கின்றனர். அவர்தான் உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள் யாவும் நீர், காற்று மற்றும் நெருப்பால் உருவாக்கப்பட்டவை என்ற கருத்தை மாற்றி, உயிருள்ளவை எவ்வாறு உயிரற்றதில் இருந்து வேறு படுகின்றன என்று, பூமிதான் உலகின் மையப்புள்ளி என்றும் அவர் கூறியதைப் பார்த்தனர். இது தவறே என கௌதமும்,நேத்ராவும் எண்ணினர். பின்னர் தாலமி வாழ்ந்த கி.பி 100ஆ ம் நூற்றாண்டுக்குள் கால எந்திரம் அவர்களை அழைத்துச் சென்று தாலமியின் கொள்கைகளை, புவி மையக்கொள்கையை விளக்குவதை பார்த்தனர். இவர்கள் கூறுவது சரி இல்லையே என்று மக்கள் நினைக்கவில்லையே என்றும் கௌதம், நேத்ரா எண்ணினார்கள். பின்னர் கால எந்திரம் சூரியனை மையமாக வைத்தே பூமி சுற்றுகிறது என்று சொன்ன நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் காலத்துக்குச் செல்கிறது. அங்கு அவரின் நான்கு மொழிப் புலமையை, அவருக்கும் திருச் சபைக்கும் நடந்த கருத்து வேறுபாடு மற்றும் மோதல்கள் , அவரின் இறப்பு அனைத்தையும் கால எந்திரம், கௌதம், அவர் அப்பா, மற்றும் நேத்ராவுக்குக் காண்பிக்கிறது. இப்படியே டைகோ பிராகி ஜொகான்னஸ் கெப்ளர் உருவாக்கிய விதிகள், கோள்களின் நீள்வட்ட சுற்றுப்பாதை கண்டுபிடிப்பு, அவரின் வாழ்க்கை , பின்னர் கலீலியோ , அவரின் கண்டுபிடிப்புகள், அவர் கண்ட நிலவின் மேடு பள்ளங்கள், அனைத்தையும் கலீலியோ அருகில் இருந்தே கால எந்திரத்தில் இருந்து எல்லோரும் பார்க்கின்ற்னர். நாமும்தான் பார்க்கிறோம். பின்னர் கி.பி 1600 ஆம் ஆண்டில் நுழைந்து பிரபஞசம் கோள வடிவிலானது என்றும், சூரியன் அதன் மையம் என்றும், விண்மீன்களால் சூழப்பட்டுள்ளது என்றும் கூறிய கோபர்நிகஸ் கொள்கை தவறு என்று கூறிய புரூனோவையும் பார்த்தனர். புரூனோ, பிரபஞசத்துக்கு மையம் இல்லை, விண்மீன்கள் சூரியன்கள் என்றும், அவை கோள்கள் மற்றும் சந்திரன்களால் சூழப்பட்டவை என்றும் கூறியதால் அவரைக் கொடூரமாக கொலை செய்ததையும் கால எந்திரத்தில் உள்ள கௌதம் அவரின் அப்பா மற்றும் நேத்ரா பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். அதன் பின்னர் ஐசக் நியூட்டன் சந்திப்பு என அனைத்து வானியல் விஞ்ஞானிகளோடும் அவர்களின் சந்திப்பு நிகழ்கிறது.
இது அவர்களின் முதல் பயணம்.
இரண்டாவது பயணத்தில் மனிதனின் முன்னோடிகளைச் சந்திக்கின்றனர். அவர்கள் 40,000 ஆண்டுகளுக்கு முன்னர் பயணித்து அங்கு வாழ்ந்த நியாண்டர்தால் மனிதன், அவர்களின் வேட்டையைப் பார்த்து வியக்கின்றனர். பின்னர் அதற்கும் முன்பாக 80,000 ஆண்டுகளுக்கு முன் சென்று விவசாயத்தின் துவக்கத்தைப் பார்க்கின்ற்னர். என்ன ஆச்சரியம்தானே. அது மட்டுமா? அதற்கும் முன்னால் கால எந்திரம் அவர்களின் விருப்பப்படி பயணிக்கிறது. மனித இனம் நேரம் அறிவதை, சந்திரன் பூமியை எத்தனை முறை சுற்றுகிறது என்றும், ஒரு வருடத்துக்கு எத்தனை நாட்கள் என்றும், நாட்காட்டிகள் உருவாக்குவதையும் நேரில் பார்த்து கண்டறிகின்றனர். பின்னர் வானத்தைப் பார்த்து விண்மீன்களை அவற்றின் நகர்வை அறிகின்றனர். எல்லா நாட்களிலும் சூரியன் கிழக்கே உதிக்கவில்லை, வருடத்தில் இரு நாட்கள் மட்டுமே என்றும் அறிகின்றனர். இதனை மலை முகட்டில் சூரியன் தெரிவதை பார்த்து தெரிந்து கொள்கின்றனர். இவற்றை எல்லாம் கௌதம், அப்பா மற்றும் நேத்ரா நேரில் பார்த்தே அதிசயித்து அறிகின்றனர், அதுவும் கால எந்திரத்தின் மூலம்தான் என்றால் கொஞசம் ஆச்சரியமாகவே உள்ளது.
அது மட்டுமா..மூன்றாவது பயணத்தில், அவர்களுக்கு உதவ, கால எந்திரம் ஒரு கணினியை அவர்களுக்குத் தருகிறது. அவர் பெயர் மதியரசர். அவர்தான் அவர்கள் பயணத்தின் வழிகாட்டி, அறிவியல் ஆசான், இவர்களின் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையும், விளக்கமும் அளிக்கிறது. புத்தகத்தின் 51 வது பக்கத்தில் மதியரசர் வருகிறார். பராக், பராக். ஆம். உங்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் விலாவாரியாக பதில் தரும் வல்லமை உள்ளவர் அவர். காவலூரில் உள்ள வைணு பாப்பு தொலைநோக்கியிலிருந்து, பூமியிலிருந்து வெகு தூரத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி வரை, அதன் பாகங்கள் , செயல்படும் முறை அனைத்தையும் மதியரசர் விளக்குகிறார். அது மட்டுமா, கால எந்திரம் அவர்களை சூரியனுக்குள்ளேயேயும் அழைத்துச் சென்று அதன் செயல்பாட்டை சுற்றும் வேகத்தை கண்கூடாகக் காட்டுகிறது, நமக்கு எந்த சேதமும் இன்றி. மேலும் வான் பொருட்களின் வகைபாடு, விண்மீன் வகைகள்,பிரகாசம், அதன் கணிதங்கள், வேதியல்,இயற்பியல் தகவல்கள், விண்மீன்களின் (சூரியனின்) பிறப்பு, வளர்ச்சி, இறப்பு பற்றியும் புட்டு புட்டு வைக்கிறார் மதியரசர். பூமியின் உயிர்கள், விண்மீனின், தோற்றம், வாழ்நாள், கதை, பிரபஞசத்தின் பிறப்பு, அங்கே தனிமங்கள் வந்த கதை, அவைகளின் போக்கிடம், மனித உடலின் பொருட்கள், வேதியல் செயல்பாடு, ஆக்சிஜன் வந்த கதை, உயிர்களின் தோற்றம், இருண்ட பொருள் (கருப்பு பொருள்) இருந்த ஆற்றல் (கருப்பு ஆற்றல், )சூரியக்குடும்பம் போன்ற பிற சூரிய குடும்பங்கள், அவற்றைத் தாண்டி இருக்கும் பிற கோள்கள் என இந்த பிரபஞசத்தில் உள்ள அத்தனை விஷயங்களையும், தெள்ளத் தெளிவாக எடுத்து உரைக்கிறது ஆதியும் அந்தமும் புத்தகம்.
நான் புத்தகம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது மிகக் குறைவே. நானே அவ்வளவையும் கூறிவிட்டால், பின்னர் நீங்கள் படித்து சுவைத்து அறிவை பரவலாக்க வேண்டாமா? உங்களுக்கு வழிவிடுகிறேன். நீங்கள் வானவியல் கதையை ரசிக்க. வாசிக்க, புத்தகத்தின் உள்ளே 200 பக்கங்களில் இன்னும் ஏராளாமான பொக்கிஷங்கள் காணக்கிடைக்கின்றன. அவற்றின் உள்ளே சென்று ஆழ்ந்து படித்து அதில் முத்தெடுத்து மீளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தங்கள் மூளைக்கு அதீதமான விருந்து புத்தகத்தில் கொட்டிக் கிடக்கிறது. அள்ளிக்கொள்ளுங்கள் உங்களால் இயன்ற அளவு. .
இதிலுள்ள விந்தை என்னவெனில், கால எந்திரம் என்ற இயந்திரம், மாந்தர்களை சுமந்து கொண்டு அந்த செயல்பாட்டை, மனிதர்களை மற்றவர்களுக்குக் காட்டாமல், அருவமாகவே அவர்களுக்கு மட்டும் ஒரு கணினியின் துணை கொண்டு, பிரபஞசத்தின் அணுவிலிருந்து அண்டம் வரை தெளிவாக விளக்குகிறது என்பதுதான். இதில் அனைத்து தகவல்களும் சொல்லப்பட்டுள்ளன. ஆசிரியர் முனைவர் சசிகுமார், மிக அழகாக, எளிய தமிழில், அறிவியல் தெரியாதவர்களும் புரிந்து கொள்ளும்படி கடினமான அறிவியல் தகவல்களையும் எளிய உதாரணங்கள் கொண்டு கதைத்துள்ளார் என்பதே, இந்த புத்தகத்தின் மிகப் பெரிய வெற்றி ஆகும். ஒரு சின்னப்பையனின் வினாவுக்கு பதில் தேடத் துவங்கி, உலகத்திலுள்ளோர் அனைவருக்கும் பலப்பல தேவையான அரிதான பதில்கள் கிடைத்துள்ளன என்பதும் இதன் அடுத்த வெற்றியின் மைல்கல். இவ்வளவு கடினமான வானவியல் மற்றும் கணித தகவல்களை ஆசிரியர் சசிகுமார் போகிற போக்கில் மிக மிக எளிதாகக் கையாண்டிருக்கிறார். அற்புதமான அறிவியல் கதை சொல்லி ஆசிரியர் சசிகுமார். Hats off to Dr .சசிகுமார்.
சசிகுமார் சார், அவர்களுக்கு ஏராளமான வாழ்த்துக்கள். ஆசிரியர் இந்த புத்தகம் எழுத ஏராளமான தரவுகளை, புத்தகங்களை படித்திருக்க வேண்டும் என்பது, புத்தகத்தின் ஒவ்வொரு பக்கங்களும், சொல்லுகின்றன. ஏராளமான மூளை உழைப்பு தேடல் இதில் விரவிக்கிடக்கிறது.
விஞ்ஞான் பிரச்சார விஞ்ஞானி, த.வி. வெங்கடேஸ்வரன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர் சேலம் ஜெயமுருகன் இருவரும் ஆதியும் அந்தமும் புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியுள்ளனர் என்பது இந்த புத்தகத்துக்கு இன்னொரு மணிமகுடம்.
அன்புடன்,
சோ. மோகனா, பழநி
மேனாள் மாநிலத்தலைவர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,
செயற்குழு உறுப்பினர்,
அகில இந்திய அறிவியல் கூட்டமைப்பு
நாள்: 01.01.23
ஆசிரியர் முனைவர் பெ.சசிக்குமார் whatsapp எண் 9447696792.
புத்தகங்கள் தேவைப்படுவோர் ஆசிரியரை தொடர்பு கொள்ளவும்.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment